

ஷாரூக்கான் தனது ‘ரயீஸ்’ திரைப்பட விளம்பரப்படுத்தல் நிகழ்ச்சிக்காக புதுடெல்லி சென்று கொண்டிருந்தார், அப்போது வதோதரா ரயில் நிலையத்தில் ஷாரூக்கானைக் காண ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ஃபர்ஹீத் கான் பதான் என்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் போலீஸார் இருவரும் காயமடைந்தனர்.
ரயீஸ் பட விளம்பர நிகழ்ச்சிக்காக ஷாரூக்கான் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி சென்று கொண்டிருந்த போது வதோதரா ரயில் நிலையத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
திங்கள் இரவு 10.30 மணிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வதோதரா ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 6-ற்கு வந்தது. இங்கு 10 நிமிடம் வண்டி நின்று செல்லும்.
ஷாரூக்கான் ரசிகர்கள் அங்கு பெருமளவு அவரைப் பார்க்க குழுமியிருந்தனர். ரயில் நின்றவுடன் ஷாரூக்கானைக் காண ரசிகர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயிலின் ஜன்னலை ஓங்கித் தட்டியவாறு ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்தனர். இதனால் சிறிய அளவில் தடியடி நடத்த வேண்டியதாயிற்று.
ரயில் கிளம்பிய போது ரசிகர்கள் ரயிலுடனேயே ஓடினர். இதில் நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கூட்டத்தை கட்டுப்படுத்த பணியிலிருந்த காவலர்களில் 2 பேர் காயமடைந்தனர்.
இவ்வாறு கூறினர்.
பலியானவர் பெயர் பர்ஹீத் கான் பதான். இவர் ஒரு உள்ளூர் அரசியல் பிரமுகர். வதோதராவில் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் மற்றும் யூசுப் பதான்களும் ஷாரூக்கானை காண ரயில் நிலையம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.