Last Updated : 14 Jun, 2017 06:50 PM

 

Published : 14 Jun 2017 06:50 PM
Last Updated : 14 Jun 2017 06:50 PM

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கார் மீது முட்டை வீச்சு: ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சென்ற கார் மீது ஒடிசாவில் மர்ம நபர்கள் சிலர் முட்டைகள் வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிசாவில் கடந்த 10-ம் தேதி மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் சுற்றுப் பயணம் செய்தார். புவனேஸ்வரத்தில் அவர் காரில் சென்ற போது இளைஞர் காங்கிரஸார் சிலர் முட்டைகள் வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேந்திரபாராவில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவால் ஓரம் சென்ற கார் மீது இன்று சிலர் முட்டைகள் வீசினர். மூன்று முட்டைகள் அமைச்சர் சென்ற கார் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

கேந்திரபாரா மாவட்டம் ராஜ்கனிகா பகுதியில், 'சப்கா சாத் சப்கா விகாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஜூவால் ஓரம் காரில் இன்று சென்றார். அப்போது கார் மீது சிலர் முட்டைகள் வீசினர். அத்துடன் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் விரைந்து சென்று எதிர்ப்பாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவத்துக்கு அமைச்சர் ஜூவால் ஓரம் ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ''ஆளும் பிஜு ஜனதா தளத்தினர், பழங்குடியினத்தவருக்கு எதிரான மனநிலையில் உள்ளது கண்டிக்கத்தக்கது'' என்று கூறியுள்ளார்.

மாவட்ட பாஜக தலைவர் சுகந்த் திவிவேதி கூறும்போது, ''மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறது. அதனால் பாஜகவின் செல்வாக்கு வளர்வதால் பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக.வின் நலத்திட்டங்களை தடுக்க இதுபோன்ற செயல்களில் இரு கட்சியினரும் ஈடுபடுகின்றனர்'' என்றார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x