

சிறைவளாகத்துக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வெளியில் இருந்து வீசுவதை தடுக்கும் வகையில், சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரிக்க திஹார் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நாட்டின் மிகவும் பாதுகாப்பு மிக்க சிறையாக கருதப்படும் திஹார் சிறையில் நுழைவு வாயில் வழியாக தடை செய்யப்பட்ட பொருட்கள் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. சிறை எண் 1, 8 மற்றும் 9 ஆகியவை சாலையோரம் உள்ள சுற்றுச் சுவரை ஒட்டி அமைந்துள்ளன. இந்த சுற்றுச் சுவரின் உட்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், டென்னிஸ் பந்து, காலுறை, சிறிய பொட்டலங்கள் ஆகியன கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட மொபைல் போன் உதிரி பாகங்கள், சிம் கார்டு, பிளேடு, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதுபோன்ற பொருட்களை மர்ம நபர்கள் வெளியில் இருந்து துாக்கி எறிகின்றனர். அதை சிறைக்குள் இருப்பவர்கள் சிறை வளாகத்தில் நடமாட அனுமதிக்கும்போது எடுத்துப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இத்தகைய சம்பவங்களை தடுக்க, சுற்றுச் சுவரின் உயரத்தை 4 முதல் 5 அடி உயர்த்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மத்திய பொதுப்பணித் துறை மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சாலையை ஒட்டி உள்ள மூன்று சிறைகளின் கண்காணிப் பாளர்கள் கண்காணிப்பு பணியை பலப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், ‘சிசிடிவி’ கேமராக்களின் எண்ணிக்கையையும், 500-ல் இருந்து ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிறையின் நுழைவு வாயில்களில் பலகட்ட சோதனை நடத்தப் படுவதால், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வது மிகவும் கடினம். அதனால், இப்பொருட்களை வெளியில் இருந்து துாக்கி வீசுகின்றனர் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச் சுவர் உயரம் அதிகரித்த பின்பும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், அதற்கு மேல் கம்பி வலை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.