

உ.பி.யில் கிரிக்கெட் விளை யாட்டில் ‘நோ பால்’ அறிவித்த நடுவரின் தீர்ப்பால் ஆத்திரமடைந்த வீரர் ஒருவர், அவரது தங்கையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
உ.பி.யின் அலிகர் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் ஜராரா என்ற சிறிய நகரம் உள்ளது. இங்கு ‘ஜராரா பிரிமியர் லீக்’ என்ற அமைப்பின் பெயரில் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கடந்த வெள்ளிக்கிழமை ஜராரா, பாரிகி ஆகிய இரு அணிகள் இடையே போட்டி நடந்தது. இதில் ஜராரா நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் நடுவராக செயல்பட்டார்.
இந்நிலையில் ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் ஒரு பந்தை ‘நோ பால்’ என ராஜ்குமார் அறிவித்தார். இதற்கு ஒரு அணியின் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. நடுவர் ராஜ்குமாரின் முடிவு நியாமில்லை என்று அவரிடம் சந்தீப் பால் என்ற வீரர் வாதிட்டார். என்றாலும் ராஜ்குமார் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சந்தீப் பால், ராஜ்குமாரை விளையாட்டு மைதானத்திலேயே தாக்கினார். மேலும் ராஜ்குமார் தனது தவறுக்கான விலையை தரப்போவது நிச்சயம் என்று சந்தீப் சபதமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜ்குமாரின் தங்கை பூஜா தனது 3 தோழிகளுடன் வீட்டுக்கு அருகில் உள்ள வனப் பகுதிக்கு சென்றுள்ளார். அவர்களை பின்தொடர்ந்து சென்ற சந்தீப் பால், துப்பாக்கி முனையில் அப்பெண்களை மிரட்டி, விஷம் கலந்த குளிர்பானத்தை அருந்தச் செய்துள்ளார். இதில் மயங்கி விழுந்த பூஜா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவரது தோழிகளான ரூபாவதி, ப்ரீத்தி, குசும் ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜராரா நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.