

காதலிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் நூதன முறையைக் கையாண்ட டிராவல் ஏஜெண்ட் கைது.
ஐந்து நாட்களுக்கு முன்னதாக விமானக் கடத்தல் மிரட்டல் விடுத்து வந்த மின்னஞ்சலை அடுத்து மும்பை, சென்னை, ஹைதராபாத் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பும் உஷார் நிலையும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த மின்னஞ்சலை அனுப்பியது பெண் என்று குறிப்பிட்டனர் போலீஸார், ஆனால் இன்று அந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது எம்.வம்ஷி கிருஷ்ணா என்ற டிராவல் ஏஜெண்ட் என்று தெரியவர அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் எம்.மகேந்தர் ரெட்டி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “இந்த நபர் சென்னையில் உள்ள தன் காதலியை மும்பைக்கு விமானத்தில் சொகுசு பயணம் அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார், ஆனால் டிக்கெட் எடுக்க பணம் இல்லை.
இதனால் ஆன்லைனில் சாட் செய்யும் போது காதலியிடம் பணம் இல்லாததால் பயணத்தை ரத்து செய்வதாக கூற தயங்கியுள்ளார். இதனையடுத்து விமானங்களே ரத்து செய்யப்படும் ஒரு சூழ்நிலையை இந்த மிரட்டல் மின்னஞ்சல் மூலம் ஏற்படுத்தியுள்ளார்” என்றார்.
ஏப்ரல் 16-ம் தேதி டிராவல் ஏஜெண்ட் வம்ஷி தன் காதலியின் பெயரில் சென்னை-மும்பை விமான போலி டிக்கெட்டை எடுத்து அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். பயண நாளுக்கு முதல் நாள் எஸ்.ஆர்.நகர் இணையதள மையத்திற்குச் சென்று போலி இணையதள ஐடி உருவாக்கி விமானக் கடத்தல் மிரட்டல் மின்னஞ்சலை மும்பை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பியுள்ளார்.
பெண் பெயரில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் மும்பை, ஹைதராபாத், சென்னை விமான நிலையங்களில் 23 பேர் விமானக் கடத்தலில் ஈடுபடப்போவதாகவும், தான் கேட்ட இந்த உரையாடல் உண்மையா பொய்யா என்று தனக்குத் தெரியாது, ஆனால் போலீஸுக்குத் தெரிவிப்பது கடமை என்று குறிப்பிட்டுள்ளார். மின்னஞ்சல் முடிவில், “என்னைக் கண்டுபிடிக்க முயலாதீர்கள், ஏனெனில் அது உங்களால் முடியாது” என்று வேறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்னஞ்சல் வந்த ஐபி அட்ரசை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் நியமித்த குழு கண்டுபிடித்து அவர் எங்கிருந்து அனுப்பினாரோ அந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு வம்ஷி கைது செய்யப்பட்டுள்ளார், விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.