

எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரத்தை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். அப்போது தான் 2019 மக்களவை தேர்தலில் அந்த இயந்திரங்களை பயன்படுத்த முடியும் என தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு அவசர கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘2019-ல் மக்களவை தேர்தல் வரவுள்ளது. அந்த தேர்தலில் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
உற்பத்தியாளர்களிடம் இருந்து அந்த இயந்திரங்கள் செப்டம்பர் 2018-க்குள் தேர்தல் ஆணையத்திடம் வந்து சேர வேண்டும். அதற்கு பிப்ரவரி 2017-க்குள் அதற்கான ஆர்டர் வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும் என ஏற்கெனவே அறிவுறுத்திப்பட்டிருந்தது’ என்பது நினைவுகூரப்பட்டுள்ளது.
எனவே, மேலும் தாமதப்படுத்தாமல் அந்த இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவகாரம் தொடர்பாக தற்போது எழுந்து சூழ்நிலையை கையாளவும், வாக்காளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் விவபாட் இயந்திரங்கள் அவசியம் கொள்முதல் செய்தாக வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 மக்களவை தேர்தலுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்த 16 லட்சம் விவிபாட் இயந்திரங்கள் தேவைப்படுவதாகவும், இதற்கு ரூ.3,174 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.