காவிரி: தமிழக அரசின் புதிய மனு டிசம்பர் 3ல் விசாரணை

காவிரி: தமிழக அரசின் புதிய மனு டிசம்பர் 3ல் விசாரணை
Updated on
1 min read

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கோரி தமிழக அரசு தரப்பில் சமீபத்தில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டிசம்பர் 3ல் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது,

தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ஷிவ்ஜித் சிங் மற்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை இதை அறிவித்தது.

தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கர்நாடக அரசு, நீர்மின் திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும், தமிழக அரசுக்கு தண்ணீர் தேவை அதிகரித்து விட்டதால் இது குறித்து ஒரு முடிவு எடுக்க ஏதேனும் ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை அமைப்பு ஒன்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு செயல்படுத்தும் இந்த மின் திட்டங்களால், தமிழ கத்துக்கு அளிக்கப்படும் தண்ணீர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சப்படுவதாகவும், அதை கண்காணிக்க குழு ஒன்றை கண்டிப்பாக அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை சுட்டிக்காட்டி, வழக்கறிஞர் வைத்தியநாதன் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் அமர்வு , டிசம்பர் 3 ஆம் தேதி அந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவித்தனர்.

4வது கூட்டம்

இதற்கிடையே, எட்டு மாதங்களுக்கு முன் அளிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட காவிரி மேற்பார்வை குழுவின் நான்காவது கூட்டம் அதன் தலைவர் அலோக் ராவத் தலைமையில் டெல்லியில் கூடியது.

அதனிடமும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறைச் செயலாளர் சாய்குமார் மற்றும் காவிரி தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன் வைத்தனர்.

இந்த கூட்டத்தில், மேகதாது நீர்மின் திட்டத்தை அமல்படுத்த முயல்வதாக தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட புகாரை கர்நாடக அரசு மறுத்தது.

நடுவர் மன்ற தீர்ப்பின்படி கடந்த மே 10-ம் தேதி அமைக்கப்பட்ட இந்த தற்காலிக குழுவுக்கு தமிழக அரசு கூறும் புகார்களை ஏற்று அதன் மீது எந்த ஒரு குழுவையும் அமைக்க அதிகாரம் இல்லை எனக் கருதப்படுகிறது. எனவே, தமிழக அரசு இது குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in