Published : 17 Oct 2014 02:10 PM
Last Updated : 17 Oct 2014 02:10 PM

சென்னையில் எனக்கு அச்சுறுத்தல்: சுப்பிரமணியன் சுவாமி வாதம்

தமிழகத்தில் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் வழக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாதிட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுப்பிரமணியன் சுவாமி மனுவில், "ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் அவர் இன்று முன்வைத்த வாதத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தவர் என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அதிமுகவினர் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அதிமுகவினர் தமிழக்த்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக நீதிமன்றத்தையும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் அவமதித்து வருகின்றனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கன்னடர் என்பதாலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததாகவும் அவதூறு பரப்புகின்றனர். நான், சென்னைக்கு சென்றால் எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஜெயலலிதா, அவரது கட்சித் தொண்டர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்தால் மட்டுமே வன்முறைகள் முடிவுக்கு வரும். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

சுவாமியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் நாரிமன், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடாது என ஜெயலலிதாவே அறிக்கை வெளியிடுவார் என உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x