

2012-ம் ஆண்டு டெல்லி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கின் 6 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா திஹார் சிறையில் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பாகியுள்ளது.
புதனன்று இவர் சில மாத்திரைகளை எடுத்துக் கொண்டு டவல் மூலம் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆனால் அப்போது திடீரென சமயத்திற்கு விழித்துக் கொண்ட சக கைதி, வினய் சர்மாவை காப்பாற்றியுள்ளார். பிறகு சிறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினார்.
நேற்று நள்ளிரவு தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் வினய் சர்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது இன்னமும் தெரியவில்லை. மேற்கு டெல்லி போலீஸார் மற்றும் திஹார் சிறை அதிகாரிகள் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் 2013-ல் ராம்சிங் என்ற இன்னொரு நிர்பயா வழக்கு குற்றவாளி திஹார் சிறை செல்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் இதனை கொலை என்று சந்தேகித்தனர், ஆனால் அதன் பிறகு நடந்த விசாரணையில் இது தற்கொலை என்று முடிவெடுக்கப்பட்டது.