

ஜிஎஸ்டி மசோதா உட்பட பொருளாதார சீர்த்திருத்தங்களில் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார்.
லாவோஸில் நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டுக்கிடையில் இருநாட்டுத் தலைவர்கள் சந்தித்த போது அருகில் இருந்தவர்கள் தெரிவிக்கும் போது, “ஜிஎஸ்டி மசோதா மூலம் குறிப்பிடத்தகுந்த பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையையும், தொழில்முனைவோருக்கான நாட்டத்தையும் அமெரிக்க அதிபர் வெகுவாக பாராட்டினார்” என்று கூறினர்.
அணுசக்தி விநியோக நாடுகளில் உறுப்பினர் தகுதி
மேலும் அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராகச் சேர அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கிறது என்று ஒபாமா கூறியுள்ளார்.
இந்தியாவுடன், ‘ஒரு முக்கியக் கூட்டாளியாக இந்தியாவுக்கு எந்த விதத்திலும் உதவத் தயார்’ என்று இருதரப்பு கூட்டத்தில் தெரிவித்ததாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒபாமாவை மீண்டும் பிரதமர் மோடி இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைத்ததாகவும் அதற்கு ஒபாமா இன்னும் தாஜ்மஹாலை பார்க்கவில்லை எனவே மீண்டும் ஒரு முறை வருவதாக உறுதி அளித்ததாகவும் லாவோஸிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.