

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர்களான விஸ்வநாதன், சாந்தப்பன் ஆகியோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காபி எஸ்டேட், பங்களா உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. சகோதரர் களான இருவரும் அங்குள்ள குஷால் நகர் அருகே தங்கும் விடுதி, தொழிற்சாலை, பெட்ரோல் நிலையம், மர அறுவை ஆலை உள்ளிட்டவைகளை “எஸ்.எல்.என்” என்ற பெயரில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திருமண கோஷ்டி போல குஷால் நகருக்கு வந்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் மணமக்களை அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்வதைப் போல அதில் வருமானவரித் துறையினர் வந்தனர். காரின் முன்பகுதியில் திருமண வாழ்த்து பேனர், பேன்ட் வாத்தியங்கள் முழங்க “எஸ்.எல்.என்” பங்களாவுக்குள் அவர்கள் நுழைய முயற்சித்தனர்.
அவர்களை பங்களா காவலாளிகள் உள்ளே விட மறுத்ததை அடுத்து, பாதுகாப்புக் காக மாறுவேடத்தில் வந்திருந்த குடகு மாவட்ட போலீஸார் உதவி யுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த பங்களாவுக் குள் நுழைந்து அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். அப்போதுதான் விஸ்வநாதன், சாந்தப்பன் ஆகியோருக்கு மாறுவேடத்தில் வருமான வரித்துறையினர் வந்திருப்பது தெரிந்தது.
இதே போல, காபி எஸ்டேட்டில் உள்ள வீடு, தங்கும் விடுதி, கூட்லூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆலை, குஷால் நகர் பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட 17 இடங்களில் சுமார் 18 மணி நேரம் தீவிர சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையில் 126 அதிகாரிகளும், 70-க்கும் மேற்பட்ட போலீஸாரும் ஈsடுபட்டனர். இதற் காக 35 திருமண அலங்கார வாகனங்களை அவர்கள் பயன் படுத்தியுள்ளனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.