நிலுவையில் உள்ள மகளிர் மசோதாவை அமல்படுத்த மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

நிலுவையில் உள்ள மகளிர் மசோதாவை அமல்படுத்த  மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்
Updated on
1 min read

பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிர் மசோதாவை அமல்படுத்தும்படி மக்களவையில் அதிமுக கோரி உள்ளது. இதை, பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அவைத் தலைவர் டாக்டர்.பி.வேணுகோபால் இன்று தன் உரையில் குறிப்பிட்டார்.

இது குறித்து வேணுகோபால் மாலை பேசியதாவது:

குடியரசு தலைவர் தனது உரையில் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரம் என மத்திய அரசு உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதை பணிசெய்யும் பெண்களுக்கு 9 மாதமாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

மகளிருக்காக உள்ளாட்சி அமைப்புகளில் 1994 ஆம் ஆண்டிலேயே ஜெயலலிதா 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இதை அவர் கடந்த வருடம் பிப்ரவரியில் 50 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளார். எனினும், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது. இதை அமல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இது, மகளிர் மேம்பாட்டை அதிகரிக்கும். எனத் தெரிவித்தார்.

முன்னதாக, ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டதிருத்தம் குறித்து குறிப்பிட்டார். இதில், தமிழக அரசிற்கு துணை புரிந்தமைக்காக மத்திய அரசு மற்றும் குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்துப் பேசியவர், அதை அமல்படுத்தி இரண்டரை மாதங்கள் முடிந்த பின்பும், கிராமங்கள் உட்படப் பல இடங்களில் இன்னும் சகஜநிலை திரும்பவில்லை எனக் குற்றம் சாட்டினார். இதை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தென் இந்திய ரயில்வேயின் சி மற்றும் டி பிரிவின் பணிக்காக தேசிய அளவிலான தேர்வில், தமிழகத்திற்கு வெறும் 5 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே அளிக்கப்படுகிறது. மீதம் உள்ளவை மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இது குறித்த புகாரின் மீது வேணுகோபால், இந்தமுறையின் காரணமாக ரயில்பணிகளின் பாதுகாப்புக்கும் குறை ஏற்பட்டிருப்பதாகவும், இதை நீக்கி பழைய முறையில் தென் மண்டல அளவில் தேர்வு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். தற்போது, அப்பணியில் அமர்த்தப்படுவோரில் தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பத்து சதவிகிதம் கூட இருப்பதில்லை எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க இருவருடங்களுக்கு முன்பே இடம் ஒதுக்கியும் அதில் மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருப்பதாகவும், அதை உடனடியாக எடுத்து அறிவிக்க வேண்டும் எனவும் வேணுகோபால் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in