

பாரதிய ஜனதா கட்சியுடன் தனது கர்நாடகா ஜனதா கட்சியை இணைக்கும் திட்டம் இல்லை என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு உண்டு என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள எடியூரப்பாவின் டாலர்ஸ் காலனி இல்லத்தில் கர்நாடக ஜனதா கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் எடியூரப்பா, செயல் தலைவர் ஷோபா கரந்தலஜே, முன்னாள் அமைச்சர்கள் ரேணுகாச்சார்யா மற்றும் தனஞ்ஜெய குமார் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது, கர்நாடகா ஜனதா கட்சியை மீண்டும் பா.ஜ.க.வில் இணைக்கலாமா அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகளைப் போல கர்நாடக ஜனதா கட்சியும் கூட்டணியில் இடம் பிடிக்கலாமா என்று முதலில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு தம்முடைய ஆதரவாளர்களுக்கு எத்தனை தொகுதிகளை கேட்கலாம், அதில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்று விவாதம் நீண்டது. பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தால் எடியூரப்பாவுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் எந்தப் பதவியை கேட்கலாம் என விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, "பாஜகவுடன் கட்சியை இணைப்பதில்லை என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்போம்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவர். அவரால் நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும். அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு" என்றார்.
எடியூரப்பாவின் 'பலே கணக்கு'
*தென்னிந்தியாவில் முதல்முறையாக பாஜகவை ஆட்சி கட்டிலில் ஏற்றினார் என்பதாலே அவர் மீது நரேந்திர மோடிக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. இதனால் தான் விரும்பியதை பா.ஜ.கவில் சாதித்து விடலாம் என எடியூரப்பா நம்புகிறார்.
* கடந்த ஆட்சியில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் தன் மீது தொடர்ந்த 3 நில மோசடி வழக்குகளில் இருந்து தப்பிக்க, பாஜகவை ஆதரிக்க முடிவு செய்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
* கர்நாடகத்தில் கடந்த முறை ஆட்சியை பிடித்த பா.ஜ.க., இந்த முறை எதிர்க் கட்சி அந்தஸ்தை கூட கைப்பற்ற முடியவில்லை. அதற்கு காரணம் எடியூரப்பா பா.ஜ.க.வின் வாக்குகளை பிரித்ததுதான் என பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். கர்நாடக சட்டப் பேரவையில் 40 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க.வை எதிர்கட்சி அந்தஸ்திற்கு உயர்த்த வேண்டும் என்றால் எடியூரப்பாவின் வசம் இருக்கும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பா.ஜ.க.விற்கு தேவைப்படுகிறது. இதனால் தனது நிர்பந்தங்களுக்கு பா.ஜ.க. மேலிடம் அடிப்பணியும் என எடியூரப்பா நம்புகிறார்.
* கர்நாடகத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் லிங்காயத்து வகுப்பின் வாக்கு வங்கி முழுவதுமாக தன் வசம் இருப்பதால் தனது நிபந்தனையை பா.ஜ.க. ஏற்றுகொள்ளும். ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலில் அதிகபடியான தொகுதிகளை கர்நாடகத்தில் இருந்து கைப்பற்ற வேண்டும் என பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதை எடியூரப்பா நன்றாகவே உணர்ந்து பலே கணக்குகளை தீட்டி இருக்கிறார்.