போலி நிறுவனங்களை நடத்திவரும் மாயாவதி சகோதரருக்கு மற்ற கட்சித் தலைவர்களுடன் தொடர்பு

போலி நிறுவனங்களை நடத்திவரும் மாயாவதி சகோதரருக்கு மற்ற கட்சித் தலைவர்களுடன் தொடர்பு
Updated on
1 min read

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தம்பி அனந்தகுமார் வருமான வரித் துறை சோதனையில் சிக்கியுள்ள நிலையில் அவருக்கு மற்ற கட்சித் தலைவர்களுடனும் நெருங்கியத் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

மாயாவதியின் தம்பி அனந்தகுமாரின் சொத்து மதிப்பு 9 ஆண்டுகளில் ரூ.7 கோடியில் இருந்து ரூ.1,300 கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதற்காக அவர் போலி நிறுவனங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் பிற கட்சிகளின் 2 முக்கியத் தலைவர்களுடனும் அனந்தகுமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வருமான வரித் துறை விசாரித்து வருகிறது.

அனந்தகுமார், ‘ஹிங்கோரா பிஃன்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் மும்பையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் அந்த நிறுவனத்துக்கு பதிலாக ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இதன் இயக்குநர்களின் பெயர்களைச் சொன்னால் தங்களுக்குத் தெரியும் என்று கூறும் இக்குடும்பத்தினர் அந்நிறுவனம் பற்றி தங்களுக்குத் தெரியாது என்கின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டியுடன் கூட்டு

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவர் ஜெகன் புஜ்பால். இவருக்கும் ஹிங்கோரா நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஊழல் வழக்கில் சிக்கியுள்ள புஜ்பால் தற்போது சிறையில் இருந்து வருகிறார். ஹிங்கோராவின் 27,000 பங்குகளை பிரவேஷ் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் என்ற நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிறுவனம் ஜெகன் புஜ்பாலின் சகோதரர் சமீர் புஜ்பாலுக்கு சொந்தமானது. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களிலும் அதிக பங்குகளை வைத்துள்ள ஜகத்தி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமானதாக உள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரான ஜெகன் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் சொத்துகள் மீது ஏற்கெனவே சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மாயாவதியின் தந்தை பிரபு தாஸ் ஓய்வு பெற்ற தபால் நிலைய ஊழியர் ஆவார். இவருக்கு ஐந்து மகன்களும் மூன்று மகள்களும் வாரிசுகள் ஆவர். இவர்களில் மாயாவதி இரண்டாவது பெண்ணாகவும், அனந்தகுமார் ஏழாவது பிள்ளையாகவும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in