வாட்ஸ்அப் உதவியுடன் தொலைந்துபோன சிறுவனை 20 நிமிடத்தில் பெற்றோருடன் இணைத்த காவல்துறை

வாட்ஸ்அப் உதவியுடன் தொலைந்துபோன சிறுவனை 20 நிமிடத்தில் பெற்றோருடன் இணைத்த காவல்துறை
Updated on
1 min read

சமூக ஊடகங்களால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய செய்திகளையே அதிகம் படிக்கிறோம், பார்க்கிறோம். அவற்றால் நன்மைகளும் விளையும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.

டெல்லியில் உள்ளூர் சந்தை ஒன்றில் தொலைந்துபோன 5 வயது சிறுவனை, வாட்ஸ் அப் உதவியுடன் அம்மாநில காவல்துறை 20 நிமிடங்களில் பெற்றோரிடம் சேர்த்துள்ளது.

டெல்லி விஸ்வாஸ் நகரின் உள்ளூர் சந்தைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் சுபன் அலி என்ற 5 வயது சிறுவர் தன்னுடைய தாயுடன் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால், தாயின் கையில் இருந்து விலகிச் சென்றுள்ளார் சுபன்.

நெரிசலில் மாட்டிக் கொண்ட அவரால், தன் தாயிடம் திரும்ப முடியவில்லை. சுபன் விலகிச் சென்றதை அவரின் தாயும் அறியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு மகனைத் தேடியபோது அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய ஃபார்ஷ் பஜார் காவல் நிலைய அதிகாரி சுனில் சர்மா, ''நாங்கள் பார்க்கும்போது சிறுவன் சுபன் சம்பவ இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு நடந்தே வந்திருந்தார். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த அவரால் தனது முகவரியைக் கூற முடியவில்லை. இதனால் அவரின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை.

வாட்ஸ் அப் வாயிலாக

காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிறிது நீர் கொடுத்து, சுபனை ஆசுவாசப்படுத்தினோம். அப்போதும் அவரால் தன் முகவரியைக் கூறமுடியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தோம். அவரைப் புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்தோம்.

''விஸ்வாஸ் நகரின் காலி பகுதியில் இந்த சிறுவன் தனியாக நின்றபோது மீட்கப்பட்டார். தற்போது அவர் ஃபார்ஷ் பஜார் காவல் நிலையத்தில் உள்ளார். சிறுவனின் பெற்றோர், முகவரி உள்ளிட்ட தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளவும்!'' என்ற வாசகங்களும் அதில் சேர்க்கப்பட்டன.

உதவிய நல் உள்ளம்

அந்தப் படம் அனுப்பப்பட்ட 20 நிமிடங்களுக்குள்ளாக, ஒரு வாட்ஸ் அப் குழுவில் இருந்து தீபங்கர் குமார் என்பவர் காவல்துறையைத் தொடர்பு கொண்டார்.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய குமார், ''சிறுவனின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் எங்கள் தெருவுக்கு அடுத்த வீதியில் அவரின் வீடு இருப்பதை உணர்ந்தேன். உடனடியாக காவல்துறைக்குத் தெரிவித்துவிட்டு, சிறுவனின் வீட்டுக்கும் தகவலைச் சொன்னேன்.

பின்னர் சிறுவனின் தந்தை லியாகத் அலியும் நானும் காவல் நிலையத்துக்கு விரைந்து, சிறுவனை மீட்டு வந்தோம்'' என்றார்.

காவல்துறைக்கு பாராட்டு

கூட்டத்தில் தொலைந்த சிறுவனின் முகவரியை சமூக ஊடகமான வாட்ஸ் அப் உதவியுடன் 20 நிமிடங்களிலேயே கண்டறிந்த டெல்லி காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in