

இந்திய எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் நாட்டு ராணுவம் மறைமுகமாக உதவுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்: பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவியில்லாமல், இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பில்லை என்றார். எல்லையில், இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர்.
இந்திய எல்லையில்,அத்துமீறி தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானுக்கு வாடிக்கை. ஆனால், சமீப காலமாக இந்த அத்துமீறல் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது. தற்போது இந்திய எல்லையில் நிலவும் சூழ்நிலையை ராணுவத்தினர் மிகவும் நேர்த்தியாக எதிர் கொண்டுள்ளனர் என்றார்.
பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவே இந்தியா விரும்புகிறது என பல முறை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் ஊடுருவல்களையும், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதையும் பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் எப்படி உறவை மேம்படுத்த முடியும் என்றார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருவதும், எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதும் இந்தியா பெரும் பிரச்சினைகளாக கருதுகிறது என்றார்.
மேலும், விவிஐபி-க்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கிய ஒப்பந்தத்தில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்றும் அந்தோணி குறிப்பிட்டார்.