வாழும் கலை நடத்திய விழாவினால் பயங்கர சேதம்; யமுனை நதிச்சமவெளியைச் சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும்: நிபுணர்கள் குழு அறிக்கை

வாழும் கலை நடத்திய விழாவினால் பயங்கர சேதம்; யமுனை நதிச்சமவெளியைச் சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும்: நிபுணர்கள் குழு அறிக்கை
Updated on
1 min read

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய மிகப்பெரிய கலாச்சாரத் திருவிழாவினால் சேதமடைந்த யமுனை நதிச் சமவெளியை சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும் என்பதோடு ரூ.13.29 கோடி செலவாகும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

சஷி சேகர் என்கிற நீராதார அமைச்சகச் செயலர் தலைமை வகித்த நிபுணர்கள் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் இந்தத் தகவலை அளித்துள்ளது.

“யமுனை நதியின் 120 ஹெக்டேர்கள் (சுமார் 300 ஏக்கர்கள்) மேற்கு வலது புறக்கரைப்பகுதி மற்றும் 50 ஹெக்டேர்கள் இடதுக்கரை சமவெளியும் சுற்றுப்புற சூழல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது” என்று நிபுணர்கள் குழு பசுமை தீர்ப்பாயத்திடம் கூறியுள்ளது.

தேசியப் பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு வாழும் கலை அமைப்பு ‘உலக கலாச்சாரத் திருவிழா’ நடத்த யமுனை நதிச் சமவெளியில் அனுமதி அளித்தது. நிகழ்ச்சியை தடை செய்ய முடியாவிட்டாலும் ரூ.5 கோடி டெபாசிட் செய்ய வாழும் கலை அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக 4 உறுப்பினர் நிபுணர்கள் குழு வாழும் கலை அறக்கட்டளை ஏற்படுத்திய ‘மிகப்பெரிய பரந்துபட்ட சேதத்திற்கு’ ரூ.100-120 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

பிறகு 7 உறுப்பினர் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு யமுனை நதி வெள்ளச்சமவெளி முழுதும் நதிப்படுகை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியது. இது ஏதோ சிறிய அளவிலான சேதம் அல்ல, பெரிய அளவில் பாழ்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியது இந்த நிபுணர்கள் குழு.

“தரை தற்போது சுத்தமாக மட்டமாக்கப்பட்டுள்ளது, கடினப்படுத்தப்பட்டுள்ளது தற்போது இது நீராதாரத்திற்கு லாயக்கற்ற பகுதியாகிவிட்டது. தாவரங்களும் முளைக்க வாய்ப்பில்லை. மிகப்பெரிய பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்ட பகுதி மிகவும் கனரக ரீதியில் கட்டப்பட்டுள்ளது. பெரிய அளவில் மண்ணும், கட்டிட இடிபாடுகளும் கடுமையாக இட்டு நிரப்பப்பட்டுள்ளது. 3 நாட்கள் கலைவிழாவின் போது இயற்கையான விளைச்சல் இனி கிடையாது என்ற ரீதியில் அந்த இடம் மாறியுள்ளது. எனவே இதனை மறுசீரமைக்க 10 ஆண்டுகள் பிடிக்கும் என்பதோடு, ரூ.13.29 கோடி செலவாகும்” என்று தனது 47 பக்க அறிக்கையில் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in