

அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதன்மைத் தலைமைச் செயல் அதிகாரிகள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரைச் சந்திக்கிறார்.
இந்தியச் சந்தை காத்திருக்கிறது, இந்திய உழைப்புக் காத்திருக்கிறது போன்ற வழக்கமான வகையறாக்களுடன் பயங்கரவாத எதிர்ப்பு, ராஜாங்க உறவுகள் என்று அறிந்த நிரந்தரங்களே பிரதமர் மோடியின் பேச்சில் பிரதானமாகவும் மேலோட்டமானதாகவும் அமைந்தது.
மோடி பேச்சின் முக்கிய அம்சங்களில் சில:
‘3 ஆண்டுகளில் ஊழல் கறைபடியாத ஆட்சி’
ஊழல்களை வேரோடு ஒழிப்பதில் தன் அரசின் சாதனைகளை விளக்கிய பிரதமர் மோடி ‘ஒரு கறை கூட இல்லை’ கடந்த 3 ஆண்டுகால ஆட்சி தூய்மையானது என்றார். ஊழல்தான் இந்தியாவில் ஆட்சிமாற்றத்துக்குக் காரணமே. ‘இந்தியர்கள் ஊழலை வெறுக்கின்றனர்’ என்று வர்ஜீனியாவில் சுமார் 600 இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே தெரிவித்தார் மோடி.
சுஷ்மா ஸ்வராஜ் ராஜாங்க உறவுகளுக்கு மனித முகம் கொடுப்பவர்- மோடி
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜாங்க உறவுகளுக்கு மனித முகம் கொடுக்கிறார் என்று பாராட்டிய பிரதமர் மோடி நல்லாட்சி வழங்க சமூக வலைத்தளத்தை திறம்படப் பயன்படுத்துவதாகப் புகழ்ந்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் உலகின் எந்த மூலையில் இந்தியர்கள் கஷ்டப்பட்டாலும் உடனடியாக அவர்களது ட்வீட்களுக்கு பதிலளிப்பதோடு செயலிலும் இறங்குவதாக மோடி தெரிவித்தார்.
“பிரச்சினையில் இருக்கும் இந்தியர்கள் உலகின் எந்த மூலையிலிருந்து ட்வீட் செய்தாலும் இரவு 2 மணியாக இருந்தாலும் சுஷ்மா அதற்குப் பதில் அளிக்கிறார். அரசும் நடவடிக்கை மேற்கொண்டு சரியான முடிவுகளை சாதிக்கிறது. இது நல்லாட்சி” என்றார் மோடி.
‘துல்லியத் தாக்குதலை எந்த நாடும் கேள்விக்குட்படுத்தவில்லை’
தன்னை பாதுகாக்க இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்காத நாடு என்பதையே எல்லையில் நடத்திய துல்லியத் தாக்குதல்கள் எடுத்துக் காட்டுகின்றன என்ற பிரதமர் மோடி, எந்த நாடும் இந்தத் தாக்குதலை எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை என்றார்.
“20 ஆண்டுகளுக்கு முன்பாக பயங்கரவாதம் என்று நாம் பேசினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று கூறுவார்கள், புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது பயங்கரவாதிகளே பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை மக்களுக்கும் அரசுகளுக்கும் புரிய வைத்து விட்டனர்” என்ற மோடி இறையாண்மையைக் காக்க சகிப்புத் தன்மையுடன் இந்தியா போராடினாலும் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதைக் காட்டவே துல்லியத் தாக்குதல் என்று தெரிவித்தார்.
‘அமெரிக்க வர்த்தகப் பள்ளிகளில் ஜிஎஸ்டியை ஆய்வுப்பொருளாக்கலாம்’
அமெரிக்கா-இந்தியா பிசினஸ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கூகுளின் சுந்தர் பிச்சை, ஆப்பிளின் டிம் குக், அமேசானின் ஜெஃப் பெஸாஸ், ஆகியோரைச் சந்தித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் பற்றி பேசினார் மோடி. குறிப்பாக ஜிஎஸ்டி வரியின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
அதை நடைமுறைப்படுத்துவது சிக்கல் நிரம்பிய ஒரு வழிமுறையே என்று கூறிய பிரதமர், அமெரிக்க வர்த்தகப் பள்ளிகளில், கல்விகளில் ஜிஎஸ்டி ஒரு பாடமாக, ஆய்வுப்பொருளாகக் கூட இருக்கலாம் என்றார், மேலும், “ஜிஎஸ்டி வரி அமலாக்கம் என்பது இந்தியா மிகப்பெரிய முடிவுகளை எடுத்து அதனை சடுதியில் அமலாக்கம் செய்யவும் முடியும் என்பதைக் காட்டுகிறது” என்றார்.
அமெரிக்க சிஇஓக்களிடம் பேசிய மோடி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுடன் வெற்றிக்கூட்டணி அமைக்க முடியும் என்றார். அமெரிக்க நிறுவனங்கள் இதற்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்ய முடியும் என்றார்.
“உலகமே இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கிறது. வர்த்தகத்தை இந்தியாவில் சுலபமாகச் செய்ய மட்டுமே 7,000 சீர்த்திருத்தங்களை இந்திய அரசு செய்துள்ளது. குறைந்த பட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்று பிரதமரை மேற்கோள் காட்டினார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே.