Published : 19 Oct 2014 11:20 AM
Last Updated : 19 Oct 2014 11:20 AM

தொழிலாளர் நல சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு: கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு

தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களும், ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பும் நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘உழைப்பே வெல்லும்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு வகை செய்யும் இந்த முயற்சி முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கவே அன்றி, தொழிலாளர்களின் நலனுக்காக அல்ல. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ‘தொழிலாளர் நல கண்காணிப்பு ராஜ்யத்தை’ முடிவுக்குக் கொண்டுவருவதுதான் என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இவ்வளவு கண்காணிப்பு இருக்கும்போதே பல தொழிலாளர் நலத் திட்டங்களின் பலன் பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பதில்லை.

இந்நிலையில், அரசின் புதிய முடிவால் தொழிலாளர்களின் நிலைமை மேலும் மோசமடையும். தொழிலாளர்களைப் பாதிக்கும் இத்தகைய சட்டத் திருத்தங்களை தொழிற்சங்கங்களுடன் விவாதிக் காமல் நிறைவேற்றுவது கடும் கண்டணத்துக்கு உரியது.

எனவே, இதுதொடர்பாக ஊழியர் சங்ககங்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி ‘தி இந்து’விடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:

உள்நாட்டு முதலாளிகளுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தொழில் நடத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்கிக் கொடுக்கும் முயற்சி இது. இதன்மூலம் தொழிற்சங்கங்களை வளரவிடாமல் அவர்களை ஒடுக்க முயற்சி நடக்கிறது. இதற்காக தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட சட்டங்களில் பெருமுதலாளிகளுக்கு சாதகமான திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

மத்திய அரசின் இத்தகைய திட்டத்தைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களும் ஊழியர் களின் தேசிய கூட்டமைப்பும் நடத்தவிருக்கும் போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் முன்னின்று நடத்துவார்கள் என ராஜா தெரிவித்தார்.

மத்திய அரசை கண்டித்து டிச.5-ல் போராட்டம்

தொழிலாளர்கள் நலச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் வரும் டிசம்பர் 5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏ.ஐ.டி.யு.சி. சங்கப் பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தொழிலாளர் சட்டங்களில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்திருக்கும் சீர்திருத்தங்களால், தொழிலாளர்களின் ஊதியம் குறையும். அவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு கிடைக்காது. தேவைப்படும் நேரத்தில் தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் வேலையில் அமர்த்திக்கொள்வதும், பிறகு எந்தவித காரணமும் தெரிவிக்காமல் வேலையை விட்டு நீக்கும் நிலையும் ஏற்படும்.இதை கண்டித்து டெல்லியிலும், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பேரணி நடத்தவுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x