

பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் பாகிஸ்தானில் பதுங்கி யுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டு உளவுத்துறை உதவியுடன் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் அடிக்கடி இடம்பெயர்ந்து வருகிறார்.
தாவூத் பதுங்கி வாழும் 9 வீடுகளின் முகவரியை இந்திய உளவுத் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அந்த முகவரிகள் அடங்கிய பட்டியல் பாகிஸ்தான் அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை அந்த நாட்டு அரசு ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து இந்திய தரப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாவூதின் முகவரி பட்டியல் அளிக்கப்பட்டது. மொத்த 9 முகவரியில் 6 முகவரிகள் உண்மையானவை என்று ஐ.நா. சபை அண்மையில் ஏற்றுக் கொண்டது.
இதுகுறித்து மத்திய வெளி யுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் விகாஷ் ஸ்வரூப் டெல்லியில் நேற்றுமுன்தினம் நிருபர் களிடம் கூறியதாவது: ஐ.நா. சபையால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தான் அரசு புகலிடம் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் தாவூத்துக்கு சொத்துகள் உள்ளன. அவை உண்மையானவை என்று ஐ.நா. சபையும் ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் பாகிஸ்தான் அரசு வழங்கி யுள்ள பாஸ்போர்ட் வைத்துள்ளார். அவரின் நடமாட்டம் குறித்து ஐ.நா. சபை தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து வருகிறது.
தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் அந்த நாட்டு ராணுவ வீரர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. இதுகுறித்துதான் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.
எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பாகிஸ்தானிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளோம். ஆனால் அந்த நாடு பாராமுகமாக செயல் படுகிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உண்மையை உணரும்போதுதான் இருநாட்டு உறவு மேம்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.