Last Updated : 17 Jan, 2015 03:51 PM

 

Published : 17 Jan 2015 03:51 PM
Last Updated : 17 Jan 2015 03:51 PM

புதிய தணிக்கை வாரியம் விரைவில் அமைக்கப்படும்: தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்சன் உட்பட 13 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக 'தி இந்து' (ஆங்கிலம்) - நாளிதழுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

கேள்வி: மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்கள் பலர் தங்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளனர். நீங்கள் அவற்றை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களா?

எங்களுக்கு இதுவரை எந்த ராஜினாமா கடிதமும் கிடைக்கவில்லை. வாரியத்தை மாற்றியமைக்க ஏற்கெனவே திட்டமிட்டுள்ளதால் உறுப்பினர்கள் ராஜினாமா பெரிய விஷயமல்ல.

கேள்வி: புதிய வாரியம் எப்போது அமைக்கப்படும்?

ஒரு சில தினங்களில் அமைக்கப்படும்...முற்றிலும் புதிய வாரியம் அமைக்கப்படும்.

கேள்வி: தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்மீது தலையீடு, அழுத்தம், ஊழல் குற்றச்சாட்டுகளை லீலா சாம்சன் முன்வைத்துள்ளாரே? அது பற்றி உங்கள் கருத்து என்ன?

எங்கள் மீது அடுக்கடுக்காக புகார் கூறும் அவர்கள் ஏன் இதை முன்னரே தெரிவிக்கவில்லை. புதிய வாரியம் அமைக்கப்படவுள்ள நிலையில் இத்தகைய புகார்களை கூறக் காரணம் என்ன.

கேள்வி: 'மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை முதன்மை தீர்ப்பாயம் (FCAT) அனுமதி அளித்ததன் பின்னணியில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறதே?

இதுபோன்ற விவகாரங்களில் எனது அமைச்சகம் எப்போதுமே தலையிட்டதில்லை. இப்படத்திற்கு முன்னதே வேறு இரண்டு படங்கள் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பின. அப்போது அரசு தலையிட்டு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சம்பந்தமாக நாங்கள் எவ்வித குரலும் எழுப்பவில்லை. மெசஞ்சர் ஆஃப் காட் படத்தைப் பொருத்தவரையில், லீலாவின் முடிவு புறக்கணிக்கப்பட்டதாலே அவர் அரசு மீது இவ்வாறு குற்றம் சுமத்துகிறார்.

கேள்வி: அப்படியென்றால், 'மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை முதன்மை தீர்ப்பாயம் (FCAT) அனுமதியளிக்க மத்திய அரசு எவ்விதத்திலும் மெனக்கடவில்லை என்கிறீர்களா?

ஆம். திரைப்படங்களை தணிக்கை செய்வதற்காகத்தான் தணிக்கை வாரியம் உள்ளதே. அதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும். தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு, தூர்தர்ஷனை தரம் உயர்த்துவதுபோன்ற பல்வேறு முக்கியப் சவால்கள் உள்ளன. புதிய எஃப்.எம் சானல்களை உருவாக்குவது என பல திட்டங்களை செயல்படுத்துவதில் நாங்கள் மும்முரமாக உள்ளோம்.

கேள்வி: கடந்த 9 மாதங்களாக தணிக்கை வாரியம் ஆலோசனைக் கூட்டம் நடத்த அமைச்சகம் முட்டுக்கட்டை போடுவதாக லீலா குற்றம் சாட்டியுள்ளாரே?

அது உண்மையாக இருந்தால், கடந்த 9 மாதங்களில் இது தொடர்பாக அவர் ஏன் அமைச்சகத்திற்கு ஒரு மின்னஞ்சலோ, கடிதமோ, குறுந்தகவலோ அனுப்பவில்லை.

கேள்வி: ஆனால் மெசஞ்சர் ஆஃப் காட் போன்ற தனி மனிதருக்கு அதுவும் சாமியார் ஒருவருக்கு விளம்பரமாக அமையும் படத்திற்கு அனுமதி வழங்குவது ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடாதா?

இப்படத்தில் சில சர்ச்சைகள் இருப்பதை நான் அறிவேன். ஆனால், ஒரு படத்தின் கதாநாயகன் தன்னை பராக்கிரமசாலியாக காட்டிக்கொள்வதால் மட்டுமே தனக்கு அந்த சக்திகள் அனைத்தும் நிஜத்திலும் இருக்கின்றன எனக் கூறிக்கொள்ள முடியாது. இப்பட்டத்தில் நெருடலாக இருக்குன் சில காட்சிகளை நீக்குமாறு திரைப்பட குழுவிடம் திரைப்படத் தணிக்கை முதன்மை தீர்ப்பாயம் (FCAT) வலியுறுத்தியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

|தமிழில்: பாரதி ஆன்ந்த்|

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x