

தெற்கு டெல்லி மருத்துவமனையில் கிட்னி திருட்டுக் கும்பல் ஒன்றை கைது செய்த போலீஸார் இந்த வலைப்பின்னலின் பின்னணியில் உள்ளவர்களை குறிவைத்து சென்னை மற்றும் கொல்கத்தாவிலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லியில் கைடு செய்யப்பட்டவர்களில் 3 பேர் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது, இருவர் 2 நாட்கள் ‘போலீஸ் காவலில்’ வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கிட்னி திருட்டுக் கும்பலின் ஒட்டுமொத்த வலைப்பின்னலையும் பிடித்து உள்ளே வைக்க 25 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் தலைவன் ராஜ்குமார் ராவ் என்பவருக்குப் போலீஸ் வலைவீசியுள்ளது, இதனடிப்படையிலேயே இன்று சென்னை மற்றும் கொல்கத்தாவில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் உள்ள இரண்டு முக்கிய மருத்துவமனைகள் மற்றும் இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மேலும் சில ஊழியர்களும் போலீஸ் விசாரணை வலையில் சிக்கியுள்ளனர்.
இந்திரப் பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் சில முக்கிய டாக்டர்கள் உட்பட மற்ற ஊழியர்களுக்கும் போலீஸ் தன் விசாரணை வலையை வீசியுள்ளது, ஒருவருக்கும் இந்த விவகாரத்தில் ‘கிளீன் சிட்’ கிடையாது என்கிறது டெல்லி போலீஸ்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரித்த போது, கடந்த ஆண்டில் கோயம்புத்தூரில் மட்டும் 10 கிட்னி மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் இந்த கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கிட்னி திருட்டுக் கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருவதாக போலீஸ் துறை கருதுகிறது. அதாவது தமிழகம் மற்றும் பஞ்சாபில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில்தான் இந்தக் கும்பலின் கைவரிசை இருந்து வருவதாகவும் போலீஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பணத்தாசை காட்டி டெல்லிக்கு கிட்னியை தானம் செய்ய பலரை அழைத்து வந்ததாக இந்த கும்பல் மீது குற்றச்சாட்டுகள் பகிரங்கமாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து போலி அடையாள அட்டைகள், வாக்காளர் அட்டைகள், ஆதார் அட்டைகள் மற்றும் லேப்டாப்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அவசியமான ஆவணமாக்கம், ஆவணச் சரிபார்ப்பு நடைமுறைகள் மீறப்பட்டு போலி ஆவணங்கள் மற்றும் கிட்னி தானம் செய்வோருடனான ஒப்பந்த ஆவணங்களில் மோசடி, மருத்துவமனை அனுமதி ஆவண மோசடி என்று பல்வேறு விதமாக இந்தக் கும்பல் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கிட்னி தானம் வழங்குபவரின் புகைப்படத்தை ஒட்டி, இவர் கிட்னி பெறுபவரின் உறவினர் என்பதாக உண்மையான உறவினரின் ஆவணங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மோசடி வேலைகளும் அம்பலமாகியுள்ளது.