சானிடரி நாப்கின் வழங்கு இயந்திரத்தை உருவாக்கிய மும்பை பள்ளி மாணவிகள்

சானிடரி நாப்கின் வழங்கு இயந்திரத்தை உருவாக்கிய மும்பை பள்ளி மாணவிகள்
Updated on
1 min read

மும்பையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிகள் மூவர், சானிடரி நாப்கின் வழங்கு இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அவற்றை தங்கள் பள்ளி கழிப்பறைகளில் பொருத்தியுள்ளனர். அதோடு நின்றுவிடாமல் மாநகராட்சிப் பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் இயந்திரத்தைப் பொருத்த நிதி திரட்டி வருகின்றனர்.

தேவிகா மல்ஹோத்ரா, மாலினி தாஸ்குப்தா, அதிதி ஆர்யா ஆகிய மூவரும் மும்பை கதீட்ரல் மற்றும் ஜான் கனான் பள்ளி மாணவிகள். அங்குள்ள பாடத்திட்டம் சாராத பிற மன்றங்களின் உறுப்பினர்களாக உள்ளனர். புதுமை, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் மன்றத்தில் இருந்த அவர்கள், தாங்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிவெடுத்தனர்.

அப்போதுதான் அவர்களுக்கு பெண்கள் கழிப்பறையில் சானிட்டரி நாப்கின் வழங்கு இயந்திரத்தை வைக்கும் யோசனை உருவானது.

உடனே மன்றத்தின் உதவியுடன் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை உருவாக்கினர். இதில் 3-டி முறையில் அச்சடிக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் இருக்கும் சென்சார் 10 ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்யும். 10 ரூபாய் நோட்டுகளை உள்ளே செலுத்தினால் ஒரு நாப்கின் வெளியே வரும்.

இதுகுறித்துப் பேசிய மாணவி மாலினி, ''இது எங்கள் தோழிகளுக்கு மிக முக்கியத் தீர்வாக அமைந்துள்ளது. இத்தனை நாள் வரை ஒரு மாணவிக்கு பீரியட்ஸ் என்றால், அவளிடம் நாப்கின் இல்லாத பட்சத்தில் மூன்று மாடிகள் இறங்கிச் சென்று, அலுவலக அறைக்குச் சென்று நாப்கின் வாங்கிவர வேண்டும். ஆனால் இப்போது அந்த பிரச்சினை இல்லை'' என்றார்.

இந்த இயந்திரத்தை மாநகராட்சிப் பள்ளிகளிலும் பொருத்த முடிவு செய்த மாணவிகள், >Riizr.com என்ற இணைய நிதி திரட்டும் வலைதளத்தை அணுகினர். சுமார் 15 நாட்களுக்கு முன்னால் இந்த கோரிக்கை பதிவேற்றப்பட்டது. இதன்மூலம் இதுவரை 2,700 டாலர்கள் (ரூ.1.74 லட்சம்) திரட்டப்பட்டுள்ளது. இது அவர்கள் எதிர்பார்த்த தொகையை விட 700 டாலர்கள் அதிகம் என்பதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

''கிடைத்திருக்கும் பணத்தைக் கொண்டு மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கு இயந்திரங்கள் பொருத்தப்படும்'' என்று மாணவி தேவிகா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in