

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அவரது அரசியல் எதிரியான ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அந்த மேடையிலேயே இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
தைனிக் பாஸ்கர் என்ற இந்தி நாளிதழின் பீகார் பதிப்பு தொடக்க விழா பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். நிதிஷ், லாலுவுக்கு நடுவே சுஷில்குமார் ஷிண்டே அமர்ந்திருந்தார்.
அரசு மீது லாலு குற்றச்சாட்டு
இந்த விழாவில் பேசிய லாலு பிரசாத், ஆளும் ஐக்கிய ஜனதா தள அரசை கடுமையாகக் குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:
பீகாரில் செயல்படும் ஊடகங்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்த செய்திகள் புறக்கணிக்கப்படுகின்றன. அரசுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே செய்தியாளர்கள் கிளிகளைப் போல் கொத்தி எடுக்கின்றனர்.
சில நாளிதழ்கள் மட்டுமே அனைத்து தலைவர்களின் செய்திகளையும் வெளியிடுகின்றன. அதுவும் விளம்பர நோக்கத்துக்காகத்தான்.பீகாரின் பத்திரிகை சுதந்திரம் குறித்து பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜுகூட கேள்வி எழுப்பியுள்ளார் என்று லாலு பிரசாத் பேசினார்.
நிதிஷ்குமார் பதிலடி
லாலுவின் பேச்சுக்கு பதில் அளித்து நிதிஷ்குமார் பேசியதாவது:
ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில் யாருடைய புகைப்படம் வெளியாக வேண்டும், அதுவும் எந்த பத்திரிகையில் வெளியாக வேண்டும் என்பதைக்கூட ஆட்சியாளர்கள்தான் தீர்மானித்தனர். இப்போது அவர்கள் எங்களை குறைகூறுவது வேடிக்கையாக உள்ளது.
சில பழங்காலத் தலைவர்கள் (லாலு) ட்விட்டரில் தங்கள் கணக்குகளை தொடங்கியுள்ளனர். பறவைகளின் இனிய ஒலியை ட்விட்டர் என்று அழைக்கின்றனர். ஆனால் சிலரின் ட்விட்டர் வலைப்பதிவு கருத்துகளால் அந்த இசை இப்போது நாராசமாக ஒலிக்கிறது.
ஏதாவது ஒரு ஊடகத்தின் ஆசிரியரை நான் தொலைபேசியில் அழைத்து பேசியதாக யாராவது கூற முடியுமா? பீகாரில் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ஊடகத்தின் செய்தியையும் முழுமையாகப் படித்துப் பார்த்து மக்கள் குறைகளை அரசு நிவர்த்தி செய்து வருகிறது என்று நிதிஷ்குமார் தெரிவித்தார்.