

தன்னைப் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டதாக இரு தொலைக்காட்சி சேனல்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் எம்.பியும், ஜிண்டால் உருக்கு மற்றும் மின் உற்பத்தி நிறுவனத் தலைவருமான நவீன் ஜிண்டால் புகார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் மற்றும் உயர் அதிகாரிகளை திங்கள்கிழமை நவீன் ஜிண்டால் சந்தித்தார். இது தொடர்பாக நவீன் ஜிண்டால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“மார்ச் 15-ம் தேதியிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், எனக்கு எதிராக இதுவரை 85 தவறான செய்திகளை ஒளிபரப்பி யுள்ளனர். எனக்கு எதிரான அவதூறான பிரச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம்” என்றார்.
அந்த செய்தி தொலைக்காட்சி சேனல், பணம் வாங்கிக்கொண்டு, சம்பந்தப்பட்டவருக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகிறது. 2012-ம் ஆண்டு என்னை பற்றி நல்லவிதமாக செய்தி வெளியிட ரூ. 100 கோடியை கேட்டு அந்த தொலைக்காட்சி சேனலின் ஆசிரியர்கள் நிர்ப்பந்தித்தனர். அதை நான் அம்பலப்படுத்தினேன். எனவே, இப்போது எனக்கு எதிரான செய்திகளை வெளியிடுகின்றனர்.” என்றார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு நன் கொடை வழங்கியதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, “அக்கட்சிக்கு நன்கொடை எதையும் நான் வழங்கவில்லை” என்றார் நவீன். தற்போது ஹரியாணா மாநிலம், குருச்சேத்திரம் தொகுதியின் எம்.பி.யாக உள்ள நவீன் ஜிண்டால், அத்தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.