

தெலங்கானா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் கடந்த சனிக்கிழமை தவறி விழுந்த 4 வயது சிறுமி, மீட்கப்படாத நிலையில் உயிரிழந்தார்.
ஹைதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம், மஞ்சாலா பகுதியைச் சேர்ந்த கிரிஜா (4) சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு பஞ்சாயத்து துறை சார்பில் தோண்டி மூடப்படாத 300 அடி ஆழ்துளை கிணற்றில் சிறுமி தவறி விழுந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக கயிறு மூலம் சிறுமியை மீட்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுமி 40 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், உடனடியாக மஞ்சாலா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார், தீயணைப்பு படையினர் 4 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதல்கட்டமாக ஆக்ஸிஜனை ஆழ்துளை கிணறு வழியாக அனுப்பினர். பின்னர் ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரும் பள்ளத்தை தோண்டியும் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் (இன்று) செவ்வாய்க்கிழமை 3–வது நாளாக மீட்புப் பணிகள் நீடித்தன. இந்த நிலையில், திடீரென சிறுமி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லாமல் போனது. இதனை அடுத்து கடந்த 50 மணி நேரத்துக்கும் மேலாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் சிறுமி கிரிஜா பலியானது தெரியவந்து.
சிறுமி கிரிஜா உயிரிழந்ததாக தெலங்கானா போக்குவரத்துத்துறை அமைச்சர் பி. மகேந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுமியின் உடலை மீட்கும் பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியை பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.