

ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா வுக்கு எதிரான கடன் மோசடி வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) சிபிஐ அமைத்துள்ளது.
முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலி காப்டர் வாங்குவது தொடர்பாக இத்தாலியின் பின்மெக்கனிகா குழுமத்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்தியர் களுக்கு லஞ்சம் தரப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக இத்தாலியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்ததுடன், இந்தியா வில் லஞ்சம் வழங்கப்பட்டதை உறுதி செய்தது.
இதனிடையே, லஞ்சம் பெற்ற இந்தியர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து முதல்கட்ட விசா ரணை நடத்தியது. சில ஆவணங் களின் அடிப்படையில் விமானப் படை முன்னாள் தலைமை தளபதி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில் எஸ்ஐடி அமைக்கப்பட்டுள்ளது.
மல்லையா விவகாரம்
சமீபத்தில் திவாலான கிங்பிஷர் விமான நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக வங்கிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், விஜய் மல்லையா லண்டன் தப்பிச் சென்றார்.
மேலும் ரூ.900 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை என ஐடிபிஐ வங்கி தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. மல்லையா வின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட துடன், அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற் கான முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. மல்லையா மீது பல்வேறு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மல்லையா மீதான மோசடி வழக்கை விசாரிக்க எஸ்ஐடி அமைக்கப்பட்டுள்ளது.