வெங்காயம் விலை ரூ.25 ஆகக் குறைந்தது

வெங்காயம் விலை ரூ.25 ஆகக் குறைந்தது
Updated on
1 min read

சில மாதங்களுக்கு முன்பு அனை வரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்த‌ வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளது.

கடந்த வாரம் பெங்களூரில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட‌ ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை, ஞாயிற்றுக்கிழமை 25 ரூபாயாகக் குறைந்தது. டெல்லியிலும் கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் இப்போது 40 ரூபாயாகக் குறைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த திடீர் விலை உயர்வு டெல்லி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலின் முடிவுகளை வெங்காயத்தின் விலையே தீர்மானிக்கப்போகிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனால் மிகுந்த‌ கவலை அடைந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு திட்டங்களை தீட்டியது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து வரத்து அதிகரித்திருப்பதால், தற்போது வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வெங்காய விலை குறைந்திருப்பதால் எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.

டெல்லியைக் காட்டிலும் பெங்களூரில் வெங்காயத்தின் விலை கடுமையாகக் குறைந்துள்ளது. கர்நாடகத்தில் சில்லறை வர்த்தகத்தில் கடந்த வாரம் 80 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெங்காயத்தைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் காய்கறிகளின் விலையும் படிப்படியாகக் குறையும் என்கிறார்கள். பனிக் காலம் என்பதால் தக்காளியின் விலை மட்டும் உயர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in