

திரிபுராவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேரிடம் தனித்தனியே விசாரணை மற்றும் கையெழுத்து சரிபார்க்கும் பணிகளை, சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத் தொடங்கியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சுதிப் ராய் பர்மன் உட்பட 6 எம்எல்ஏக்கள், அக்கட்சியில் இருந்து விலகி மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
தங்களை திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏவாக அங்கீகரிக்கவும், அதன் மூலம் திரிணமூல் காங்கிரஸை திரிபுராவின் பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கவும் வேண்டும் என, அவர்கள் சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் தனித்தனியே அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், கோரிக்கை கடிதத்தில் அவர்களின் கையெழுத்து சரிபார்க்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதற்கான பணிகளை சபாநாயகர் தொடங்கிவிட்டதாக, சட்டப்பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுதிப் ராய் பர்மனுக்கு, இம்மாதம் 22-ம் தேதி சபாநாயகரை சந்திக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மொத்தம், 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 50 பேர் உள்ளனர். மீதமுள்ள 10 உறுப்பினர்கள் காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில், 6 பேர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்ததால், காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.