

ஆளுநர் அலுவலகத்தின் மாண்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் செயல்படுவதாகவும் அவரை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை ஊழியர்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 98 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த கடிதத்தின் நகல் பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகை, மத்திய உள்துறை அமைச்சர், முதல்வர் முகுல் சங்மா ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 11 அம்சங்கள் அடங்கிய அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:
''ஆளுநர் மாளிகையின் மாண்புக்கு களங்கம் தரும் வகையில் ஆளுநர் சண்முகநாதன் செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையை ( ராஜ்பவன்) இளம்பெண்களின் விடுதி போல மாற்றிவிட்டார்.
இளம்பெண்கள் தமது விருப்பம் போல் வந்து தங்கவும் அல்லது திரும்பவும் ஏற்ற இடமாக மாற்றப்பட்டுவிட்டது. தடையின்றி அவரது அறைக்கு அவர்கள் நேரடியாக வந்து செல்கிறார்கள். ஆளுநரின் இல்லத்தின் பாதுகாப்பும் விட்டுக்கொடுக்கப்படுகிறது
இரண்டு மக்கள் தொடர்பு அலுவலர்கள், ஒரு சமையல் ஊழியர், இரவுப் பணி நர்ஸ் ஆகியோரை ஆளுநர் நியமித்துள்ளார். அவர்கள் அனைவருமே பெண்கள். அவருக்காக பணி செய்ய பெண்களையே அவர் தேர்வுசெய்துள்ளார். தனது தனி செயலர் ஆண் என்பதால் அவரை ஆளுநர் செயலகத்துக்கு மாற்றிவிட்டார்'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.