Published : 15 Oct 2013 11:06 AM
Last Updated : 15 Oct 2013 11:06 AM

ம.பி. விபத்து: 21 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம், டட்டியா மாவட்டம் ரத்னாகர் துர்கா மாதா கோயிலில் நடந்த விபத்து தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கேத் பாண்வே உள்ளிட்ட 21 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்​தல் ஆணை​யத்​தின் அனு​ம​தி​யைப் பெற்று இந்த நட​வ​டிக்​கையை மத்தியப் பிரதேச மாநில அரசு எடுத்​துள்​ளது.​

தசரா பண்டிகையின் கடைசி நாளை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் டட்டியா மாவட்டம் ரத்னாகர் துர்கா மாதா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட நெரிசலில் பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். கோயிலுக்குச் செல்லும் பாலத்தின் கீழே பெருக்கெடுத்து ஓடும் சிந்து நதியிலும் பலர் விழுந்தனர். அவர்களில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுவரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

டிராக்டர் புகுந்தது

பக்தர்களின் பெரும் கூட்டத்துக்கு இடையே டிராக்டர் ஒன்று புகுந்ததால், பாலத்தின் கைப்பிடிச் சுவர்கள் உடைந்தன. இதுவே இத்தனை பேர் உயிரிழக்க முக்கியக் காரணமானது. இதைத் தொடர்ந்து, பாலம் உடைவதாக கிளம்பிய புரளியால் நெரிசல் மேலும் அதிகமானது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்த, நெரிசல் மேலும் கூடியது. இந்த நெரிசலில் 30 குழந்தைகள் பலியாயினர்.

போலீஸ் மீது கல்வீச்சு

நெரிசலுக்குப் பின் பாதிக்கப்பட்ட வர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகள் தாமதமானதால் பக்தர்களிடையே கோபம் கிளம்பியது. 60 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்டத் தலைநகரமான டட்டியாவிலிருந்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் பத்தர்கள் அங்கிருந்த போலீசார் மீது கற்களை வீசத் தொடங்கினர். இதனால் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

டட்டியா அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை பிரேதப் பரிசோதனை நடந்தது. மாவட்ட மருத்துவ அதிகாரியான ஆர்.எஸ். குப்தா தலைமையில் திங்கள்கிழமையும் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

நிவாரண உதவி

நவம்பர் 28-ல் மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பாஜக முதல்வரான சிவராஜ் சிங் சௌகான், உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒன்றரை லட்சமும், அதிக காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் மற்றும் சிறிய காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு தனது அதிகாரிகளுடன் வந்த முதல்வர், ‘சம்பவம் குறித்து விசாரிப்பதற்கான குழு தேர்தல் ஆணைய அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அது 2 மாதங்களில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்’ எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய மத்திய பிரதேச மாநில தலைமைச் செயலர் அந்தோணி ஜே.சி.டிசா, "பாலத்தில் நுழைந்த ஒரு டிராக்டர் கைப்பிடிகளை இடித்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாலம் உடைவதாக கிளம்பிய புரளி, நெரிசலை மேலும் அதிகரித்தது. முழு விசாரணையில் மேலும் பல உண்மைகள் தெரியவரும்" என்று குறிப்பிட்டார்.

கோயில் வரலாறு

மத்திய பிரதேச தலைநகரான போபாலில் இருந்து சுமார் 320 கி.மீ தொலைவில் உள்ளது டட்டியா மாவட்டம். இதன் சவேதா தாலுகாவில் ஓடும் சிந்து நதியின் ஓரம் அமைந்துள்ள ரத்னாகர் கிராமத்தில் பழமையான துர்கா மாதா கோயில் உள்ளது.

துர்கா கோயில் இந்தப் பகுதியை ஆண்ட ரத்தன் சேன் என்ற அரசரால் 12 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை சம்பல்வாசிகள் மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். இந்த கோயில் சிறியதுதான் என்றாலும் அதன் மீது சம்பல்வாசிகள் வைக்கும் நம்பிக்கை மிகப் பெரிது.

கோயில் அமைந்துள்ள இடம்

இந்தக் கோயில், உபி, ராஜஸ்தான் மற்றும் மபி மாநிலத்தில் பரவியுள்ள சம்பல் பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு இடையே உள்ள ரத்னாகர் எனும் கிராமத்தின் அருகில் அமைந்துள்ள மலை மீது உள்ளது. இதில் இருக்கும் துர்கா மாதாவின் சிலை மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நெரிசல் ஏற்பட்ட பாலம், தாண்டியவுடன் துவங்கும் மலையில் சுமார் ஓன்றரை கி.மீ தொலைவில் அந்தக் கோயில் அமைந்துள்ளது.

சம்பல் கொள்ளைக்காரர்கள் கோயில்

சம்பல் கொள்ளைக்காரர்கள் நடமாட்டமுள்ள பகுதியில் உள்ள இந்தக் கோயிலுக்கு ‘கொள்ளைக்காரர்கள் கோயில்’ என்றும் ஒரு பெயர் உண்டு. காரணம், இந்த பகுதியில் இருந்த சம்பல் கொள்ளைக்காரர்கள் துர்கா மாதாவை வேண்டிக் கொண்டு கொள்ளையடித்த பின் மணிகளை கோயிலுக்குக் கொண்டு வந்து மாட்டிச் செல்வார்கள். இன்று கூட அந்தக் கோயிலில் கொள்ளையர்கள் கட்டிய மணிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கோயில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் வரை மலை மீது உள்ள ஒரு மேடையில் துர்கை அம்மன் சிலை மட்டும் இருந்தது. கொள்ளைக்காரர்களின் நிதியால் கோயிலின் பெரும்பகுதி கட்டப்பட்டதாக சம்பல்வாசிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே, மபி அரசு இந்தக் கோயிலை அதிகமாக கண்டுகொள்ளாமல் இருந்தது. தற்போது விபத்துக்குள்ளான பாலம் 2006-ல் கட்டப்பட்டது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x