

செப்டம்பர் 27-ம் தேதி முதல் சிறப்பான பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு, பெங்களூர் ஆணையர் எம்.என்.ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தக்க பாதுகாப்புடன் பெங்களுர் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டதாக பெங்களுர் காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து நீதிபதி கையெழுத்திட்ட தீர்ப்பு நகல் பிற்பகல் 2.30 மணியளவில் பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு முறையாக ஏற்கப்பட்ட நிலையில் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் தக்க பாதுகாப்புடன் அதிமுக ஆதரவாளர்கள் வழி எங்கிலும் திரண்டு நிற்க சிறை வளாகத்திலிருந்து பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.
இது குறித்து பெங்களூர் காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தக்க பாதுகாப்புடன் பெங்களுர் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து பெங்களூரில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியான சூழல் நிலவியது.
உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கு சிறப்பான முறையில் இருந்ததால், சூழல் இயல்பாக அமைந்தது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி முதலே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி.
இந்த நேரத்தில் பெங்களூர் வாழ் மக்களுக்கும் அனைத்து ஊடக குழுவினருக்கும் நன்றி கூற வேண்டும். அதே போல இங்கு அமைதி சூழல் ஏற்பட உதவிய தமிழகத்திலிருந்து வந்த பாதுகாப்புக் குழுவினருக்கும் அவரது ஒத்துழைப்புக்கும் பாராட்டுக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.