

ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா, சீமாந்திரா ஆகிய இரு பகுதிகளிலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் சினிமா நட்சத்திரங்களை களமிறக்கவுள்ளன. இதற்காக முன்னணி நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் தெலங்கானாவில் ஏப்ரல் 30-ம் தேதியும், சீமாந்திரா பகுதியில் மே 7-ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக நகராட்சி, மாநகராட்சி, மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் கூட்டணி அமைப்பது குறித்து மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரங்களில் சினிமா நட்சத்திரங்களை களம் இறக்கவும் முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கமிட்டி தலைவராக மத்திய அமைச்சர் சிரஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தம்பியும் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகருமான பவன் கல்யாண், விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்.
காங்கிரஸுக்கு சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம்சரண் தேஜா பிரச்சாரம் செய்வார் என்று தெரிகிறது.
பாஜக சார்பில் நடிகை அமலா தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இவர் போட்டியிட்டால், இவருக்கு ஆதரவு திரட்ட இவரின் கணவரும் முன்னணி நடிகருமான நாகர்ஜுன், மற்றும் அவரது மகன் நடிகர் நாக சைதன்யா பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. நடிகர் கிருஷ்ணம் ராஜு, பாஜக சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளார். இவருக்காக நடிகர் பிரபாஸ் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இதே போன்று நடிகர் மகேஷ்பாபுவும் அவரது உறவினரும் முன்னாள் அமைச்சருமான கல்ல அருணகுமாரி மற்றும் அவரது மகன் கல்ல ஜெயதேவ் ஆகியோர் தெலுங்குதேசம் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நடிகர் மகேஷ்பாபு பிரச்சாரம் செய்வார் என கூறப்படுகிறது. இதே போன்று, நடிகர் ராஜசேகர், ஜீவிதா, ஆகியோரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. ஏற்கெனவே ஒய்.எஸ்.ஆர். கட்சிக்கு நடிகை ரோஜா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஏராளமான நடிகர், நடிகைகள் பிரச்சாரத்தில் குதிப்பதால், ஆந்திர மாநிலத்தில் தேர்தல் களம் திரை நட்சத்திரங்களால் மின்ன இருக்கிறது.