1962-ல் இருந்த இந்தியாவை 2017 இந்தியாவுடன் ஒப்பிட முடியாது: சீனாவுக்கு ஜேட்லி பதிலடி

1962-ல் இருந்த இந்தியாவை 2017 இந்தியாவுடன் ஒப்பிட முடியாது: சீனாவுக்கு ஜேட்லி பதிலடி
Updated on
1 min read

இந்தியா வரலாற்றுப் பாடங்களைப் புறக்கணிக்கிறது என்று சீனா, சிக்கிம் எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் எச்சரித்ததையடுத்து அருண் ஜேட்லி சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

“வரலாற்றை அவர்கள் நமக்கு நினைவூட்ட விரும்பினால், 1962 சூழ்நிலை வேறு, 2017-ல் இந்தியா வேறு” என்று செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

“பூட்டான் அரசு தங்கள் நிலப்பகுதிக்கு சீனா உரிமை கோருகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இது மிகவும் தவறான செய்கை, பூட்டன் அரசு அறிக்கைக்குப் பிறகு விஷயங்கள் நமக்குத் தெளிவாகிறது. அது பூட்டனின் நிலப்பகுதி, இந்திய எல்லையை ஒட்டி இருக்கிறது, பூட்டானும் இந்தியாவும் அப்பகுதி பாதுகாப்புக்காக உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது.

சீனா தற்போதைய நிலையை மாற்ற விரும்புகிறது. இன்னொரு நாட்டின் நிலப்பகுதியை பிடித்து வைத்துக் கொள்வோம் என்று சீனா நினைத்தால் அது முற்றிலும் தவறு” என்றார் அருண் ஜேட்லி.

சிக்கிம் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக சீனா குற்றம்சாட்டியதோடு, இந்திய ராணுவத் தளபதியின் ‘போர்’ விருப்பத்தைச் சுட்டிக்காட்டி வரலாற்றிலிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரித்திருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in