Last Updated : 11 May, 2015 11:07 AM

 

Published : 11 May 2015 11:07 AM
Last Updated : 11 May 2015 11:07 AM

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: சசிகலா, சுதாகரன், இளவரசியும் நிரபராதி; பல கோடி ரூபாய் சொத்துக்கள் விடுவிப்பு- மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

*

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது. வழக்கில் இணைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் விடுவிக்கப்பட்டன.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த‌ இவ்வழக்கை திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று 2003-ம் ஆண்டு பெங்களூருவுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றிய‌து.

நீண்ட காலமாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேரும் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமிக்கப்பட்டு கடந்த ஜனவரி 5-ம் தேதி விசாரணை தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.குமார், எல். நாகேஷ்வர ராவ், சசிகலா தரப்பில் முன்னாள் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியும் வழக்கறிஞருமான ஆர். பசன்ட், மணிசங்கர் ஆகியோர் வாதிட்டனர். சுதாகரன், இளவரசி தரப்பில் தமிழக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் வழக்கறிஞருமான சுதந்திரம் ஆஜரானார். நான்கு பேர் தரப்பிலும் சுமார் 400 பக்க எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

அரசு வழக்கறிஞர் பவானி சிங் தரப்பில் சுமார் 20 மணி நேரம் இறுதிவாதமும் சுப்பிர மணியன் சுவாமி தரப்பில் 14 பக்க எழுத்துப்பூர்வ வாதமும் முன்வைக்கப் பட்டது. 41 நாட்களில் அனைத்துக்கட்ட விசார ணையை முடித்த நீதிபதி குமாரசாமி கடந்த மார்ச் 11-ல், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதனிடையே திமுக தரப்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனத்தை எதிர்த்தும் தங்களை மூன்றாம் தரப்பாக சேர்க்கக்கோரியும் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி, ''பவானிசிங் நியமனம் சட்டப்படி செல்லாது. அவர் முன்வைத்த வாதங்களை தீர்ப்பு எழுதும்போது கருத்தில் கொள்ளக்கூடாது. திமுக தரப்பும் கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய் யும் எழுத்துப்பூர்வமான வாதத்தை கருத்தில் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டும்'' என உத்தரவிட்டது.

இதையடுத்து ஜெயலலி தாவுக்கு எதிராக‌ திமுக தரப்பில் 81 பக்க எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய‌ அரசு தரப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா மீண்டும் நியமிக்கப்பட்டு 18 பக்க எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிய ஆவணங்கள், நீதிபதி குன்ஹா வின் 1136 பக்க தீர்ப்பு, குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு முன்வைத்த வாதம், சுப்பிர மணியன் சுவாமி, திமுக, அரசு தரப்பு ஆகியோர் முன் வைத்த வாதங்களின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி கடந்த 2 மாதங்களாக தீர்ப்பு எழுதி முடித்தார்.

பலத்த பாதுகாப்பு:

தீர்ப்பு நாளையொட்டி கர்நாடக உயர் நீதிமன்றத் தில் நேற்று பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. நீதிமன்ற அறை எண் 14-ல் 500-க்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்களும் பத்திரிகையாளர்களும் கூடினர். காலை 10 மணிக்கு நீதிமன்ற அறை திறக்கப்பட்டதும் ஜெயலலிதா தரப்பின் வழக்கறி ஞர்கள் பி.குமார், மணிசங்கர், செந்தில், அசோகன் ஆகியோரும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, திமுக தரப்பு வழக்கறிஞர்கள் தாமரைசெல்வன், சரவணன் ஆகியோர் ஆஜராகினர்.

2 நிமிட பரபரப்பு தீர்ப்பு:

நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறை உயரதிகாரிகள் 10.55 மணிக்கு தயாராக நின்றதை தொடர்ந்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி 11 மணிக்கு அறைக்குள் நுழைந்தார். நீதி பரிபாலனத் தின் ஆசனத்தை தொட்டு கும்பிட்டுவிட்டு மேல்முறையீட்டு மனுக்களின் எண்களை வாசித்தார். அதை தொடர்ந்து அவர் தீர்ப்பு வழங்கினார்.

''சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப் படுகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான தண்டனை ரத்து செய்யப் பட்டு நிரபராதிகள் என விடுவிக் கப்படுகின்றனர். நான்கு பேரின் ஜாமீன் பத்திரங்கள் ரத்து செய்யப் பட்டு, வழக்கில் இணைக்கப்பட் டுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் விடுவிக்கப்படுகின் றன'' என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மொத்தம் 919 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில் கடைசி 2 பக்கங் களை மட்டும் இரண்டு நிமிடங்களில் அவர் வாசித்து முடித்தார்.

முதல்வராக தடை இல்லை:

இந்த தீர்ப்பு குறித்து ஜெயலலி தாவின் வழக்கறிஞர் பி.குமார், 'தி இந்து'விடம் கூறியதாவது:

இந்த வெற்றிக்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தி ருக்கிறோம்.மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். உண்மையில் நீதிக்கு கிடைத்த பெரும் வெற்றி இது.

எங்கள் தரப்புக்கு மாபெரும் விடுதலையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. ஜெயலலிதா உள்ளிட் டோர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பால் நிரூபிக்க முடிய வில்லை. திமுக அரசின் அழுத்தத் தின் காரணமாக தொடுக்கப்பட்ட இவ்வழக்கில் எங்களுடைய தரப்பினர் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு தற்போது எந்த தடையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

919 பக்க தீர்ப்பில், ஜெ. விடுதலைக்கு முக்கியக் காரணங்களைச் சொல்லும் அம்சங்கள்:

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. | முழுமையாக படிக்க ->ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் 'எண்கள்' |

தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அதிமுகவினர் "புரட்சித்தலைவி வாழ்க" என கோஷமிட்டனர். இதற்கு கர்நாடக போலீஸார் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதிமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்:

இதனையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோ பதிவு: