

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அடுத்த நாளே, அக்கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது ஆளும் கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி சனூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா, சமனா தொகுதி எம்.எல்.ஏ. சேதன் சிங் ஜவுரமஜ்ரா ஆகியோர் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். வெள்ள நிவாரணத்தை அரசு கையாண்ட விதம், தன் மீது போடப்பட்ட குற்ற வழக்குகள் உள்ளிட்ட விவகாரங்களில் பதான்மஜ்ரா நீண்ட காலமாகக் கட்சித் தலைமையுடன் மோதல் போக்கில் இருந்தார்.
கட்சி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இருவரது பெயரும் இடம்பெறவில்லை. மேலும், இவர்களது தொகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை கட்சித் தலைமை நியமித்ததால், தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.