

காத்மாண்டு / புதுடெல்லி: நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் மலைப்பகுதி அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும்போது ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 4,371 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ‘பெரிச்சே’ ஹெலிபேடில் நேற்று காலை 8:11 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7:56) ‘ஃபிஷ்டெயில் ஏர்’ நிறுவனத்தின் ஹெலிகாப்டரும், சரக்குகளை ஏற்றி வந்த ‘ஏர் டைனஸ்டி’ நிறுவனத்தின் ஹெலிகாப்டரும் ஒரே நேரத்தில் தரையிறங்க முற்பட்டபோது பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த வசந்த்குமார் பலராமராமடு (47) என்ற சுற்றுலாப் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நியூஸிலாந்து குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சைலேஷ் கிருஷ்ணா படேல் மற்றும் பைலட் ரவீந்திர பிரஜாபதி ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக காத்மாண்டு் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். மற்றொரு பைலட்டான பிரஜ்வல் கேசி லேசான காயங்களுடன் தப்பினார்.
விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் வானிலை மிகவும் தெளிவாக இருந்ததாக சோலுகும்பு மாவட்ட முதன்மை அதிகாரி காமன் சிங் தாப்பா மகர் தெரிவித்துள்ளார். எனவே, மோசமான வானிலையால் இந்த விபத்து நடக்கவில்லை என்றும், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வசந்த் குமாரின் உடல் ‘லுக்லா’ பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்தவுடன் அவரது உடல் காத்மாண்டு கொண்டு வரப்பட்டு, இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.