

பிஷ்ணுபூர்: மொய்ராங்கில் ராக்கெட் தாக்குதல் எனச் சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு, அவர்களின் தாயார் காயமடைந்தது பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் மணிப்பூர் அரசு 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு செல்போன் இணைய சேவையை முடக்கியுள்ளது. மேலும், பிஷ்ணுபூரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள, பதற்றம் நிறைந்த கிராமமான மொய்ராங்கின் 'த்ராங்லாபி அவாங் லெய்காய்' பகுதியில், இன்று (ஏப்.7) அதிகாலையில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் அல்லது மோட்டார் குண்டு தாக்குதலில், தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனும், 6 மாத பெண் குழந்தையும் உயிரிழந்தனர். அவர்களின் தாயார் காயமடைந்தார். இந்தச் சம்பவம் காரணமாக மணிப்பூரில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து மொய்ராங் மக்கள் ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு அருகே இரண்டு எண்ணெய் டேங்கர்களையும், ஒரு சரக்கு லாரியையும் தீயிட்டுக் கொளுத்தினர். மேலும், அங்குள்ள காவல் நிலையத்துக்கு வெளியே டயர்களை எரித்ததோடு, தற்காலிகக் காவல் சோதனைச்சாவடி ஒன்றையும் சேதப்படுத்தினர். இதனால் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இன்று வெளியிடப்பட்ட உள்துறைத் துறையின் உத்தரவின்படி, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் செல்போன் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 7 அன்று பிற்பகல் 2 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 குழந்தைகள் கொல்லப்பட்ட தாக்குதலை மிருகத்தனமான செயல் என்றும், மனிதநேயத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் அம்மாநில முதல்வர் கேம்ச்சந்த் சிங் கடுமையாக கண்டித்தார். அவர், "இச்சம்பவத்தை நான் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன். இதற்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு, தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் கீழ் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலேயே மற்றொரு வெடிபொருளும் மீட்கப்பட்டதாகவும், குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.