Last Updated : 11 Oct, 2014 09:17 PM

 

Published : 11 Oct 2014 09:17 PM
Last Updated : 11 Oct 2014 09:17 PM

ஹூத்ஹூத்’ புயல் அபாயம்: ஆந்திரா, ஒடிசாவில் லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்

ஆந்திரா, ஒடிசா மாநிலங்களைத் தாக்கும் ஹூத்ஹூத் என்ற பயங்கரப் புயல் காரணமாக இரு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது.

இந்தப் புயல் நாளை அதிகாலை அளவில் மணிக்கு 195 கிமீ வேகம் பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மதியம் 2.30 மணியின் படி ஹூத்ஹூத் புயல் விசாகப்பட்டிணத்திற்கு தென்மேற்கே 250கிமீ தொலைவிலும், கோபால்பூருக்கு 340 கிமீ தெற்கு-தென் கிழக்கே மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை அதிகாலை 5.30 மணியளவில் இந்தப் புயலின் வேகம் மணிக்கு 170 கிமீ அல்லது 180 கீமீ-ஆக அதிகரிக்கும் என்றும் 195 கிமீ வேகத்தில் கடும்காற்று வீசக்கூடும் என்றும் டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர நிலவரம்:

ஆந்திர அரசு மொத்தமாக 5,14,725 பேர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

கிழக்கு கடற்கரை பகுதியை நெருங்கிவரும் ஹுத்ஹுத் புயல், ஆந்திராவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அம்மாநில கடற்கரையோர கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புயல் அபாயத்தை சந்திக்கும் விதமாக, அங்கு 146 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 5 லட்சம் பேரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஆந்திர மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி அந்தமானில் புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது. கடலோர ஆந்திராவை நோக்கி இந்தப் புயல் சின்னம் நகர்ந்து வரும் நிலையில், நாளை (சனிக்கிழமை) விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசாவின் புவனேஷ்வருக்கு இந்தப் புயல் சின்னம் கரையை கடக்கிறது.

இந்தப் புயலின் அபாயம் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

கடந்த சில வருடங்களில் இது போன்ற புயல் சேதங்களால் கடுமையான அளவில் ஆந்திர மாநிலம் பாதிக்கப்பட்ட நிலையில், நாளை வர இருக்கும் அசாதாரண சூழலை சந்திப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மெற்கொண்டு வருகிறது. மத்திய அரசும் பேரிடர் மீட்பு குழுவினரை ஆந்திராவின் கடலோர கிராமங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினத்திலிருந்து 24,000-க்கும் மேலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், விஜயநகரத்திலிருந்து 15,000 பேரும், ஸ்ரீகாகுளத்திலிருந்து 46,000 பேரும் மற்றும் கிழக்கு கோதாவரி போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்காக ஆங்காங்கே மொத்தம் 146 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பேரிடர் மீட்பு குழுவின் 17 அணியினரும் சூழலை கையாளும் நடவடிக்கைகளுக்காக ஆந்திர கடற்கரை கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதை தவிர விசாகப்பட்டின துறைமுக பகுதிக்கு ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீகாகுலத்தில் சனிக்கிழமை காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் நெருங்கி கொண்டிருப்பதால், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கடற்கரையோர பகுதிகளில் உள்ள கூரை வீடுகள் புயலில் தூக்கி வீசப்படலாம், சாலையில் உள்ள மரங்கள் மற்றும் கம்பங்கள் சாயலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து, ஆந்திர அரசு அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்துள்ளதாக அம்மாநிலத் துணை முதல்வர் கே.இ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய கடற்படையின் சார்பில் 4 கப்பல்கள் விசாகப்பட்டின துறைமுகத்தில், ரப்பர் படகுகள், உடை, உணவு, போர்வை, மருத்துவ உதவிப் பொருட்களுடன் போன்றவையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையின் சுமார் 5,000 வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக விமானப்படை சார்பில் 6 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், கூடுதலாக 30 ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் மீட்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ளனர்.

ஹுத்ஹுத் புயல் நெருங்கி வரும் நிலையில், புயல் தொடர்பான புகைப்படங்களை அளிக்குமாறு இஸ்ரோ ஆய்வு மையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விசியநகரம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய 5 கடலோர மாவட்டங்களில் 64 மண்டலங்களில் உள்ள 436 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 370 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 பிரிவுகள் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

ஹுத்ஹுத் புயல் நெருங்கி வரும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 3.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 39 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோராபட், மல்கான்கிரி, கஜபதி, ராயகடா, கஞ்சம், கலாஹண்டி, காந்தமால் ஆகிய பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக்கான இடங்களுக்கு அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 3.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புயல் வேகமாக நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 15 படையினரும், ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 10 படைப்பிரிவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகங்கள் பிரெட் போன்ற உணவுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் தங்கள் வசிப்பிடத்தைவிட்டு வெளியேற மறுப்பதால், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் சிக்கல் நிலவுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிமீ முதல் 165 கிமீ வேகம் வரைக் காற்று வீசக்கூடும். நாளை மதியம் முதல் 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையளவு 10 செ.மீ முதல் 25 செ.மீ வரை பதிவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

ஆந்திராவை நெருங்கும் ஹுத்ஹுத் புயல்: 38 ரயில்கள் ரத்து:

ஆந்திராவை நோக்கி நகரும் ஹுத்ஹுத் புயல் நாளை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைவு ரயில்கள் உட்பட 38 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

வங்கக் கடலில் அந்தமான் தீவு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது.

கடலோர ஆந்திராவை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஹுத்ஹுத் புயல் 12-ஆம் தேதி முற்பகலில் ஆந்திராவை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விசாகப்பட்டினம்- ஒடிஸா மாநிலம் கோபாலபூர் இடையே கரையைக் கடக்கும் ஹுத்ஹுத் புயல் மிக கடுமையான புயல் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை மார்கத்தில் அக்டோபர் 12-ஆம் தேதியில் புவனேஷ்வர்-விசாகப்படினம் இடையே காலை 6 மணி முதல் இயங்கும் 38 விரைவு மற்றும் பயணிகள் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே இயக்குனர் ஜே.பி. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது:

கிழக்கு கடற்கரை மார்கத்தில் உள்ள புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன் விவரம்:

விஜயவாடா, பல்லார்ஷா, நாக்பூர் ரயில்கள்

13352 ஆலப்புழா-தன்பத் விரைவு ரயில்

22641 திருவனந்தபுரம்-ஷலிமர் விரைவு ரயில்

12666 கன்னியாகுமரி-ஷலிமர் விரைவு ரயில்

இதைத் தவிர, அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய இரு தேதிகளிலும், 13351 தன்பத்- ஆலப்புழா வரும் விரைவு ரயில், ஆலப்புழா ரயில் நிலையத்துக்கு இரவு 8.20க்கு வந்து சேரும்.

ஒடிசா மாநிலத்திற்கு வந்து சேரும் 39 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x