

டெல்லியில் தலைமைச் செயலாளர் தலைமையில் 'மகளிர் பாதுகாப்புப் படை' எனும் அமைப்பைத் தொடங்க, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
டெல்லியில் 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி, கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இதற்காக நடந்த போராட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியினரும் தீவிரமாக களம் இறங்கி போராடினர்.
இவர்கள் ஆட்சி தற்போது டெல்லியில் அமைந்தவுடன், கடந்த ஜனவரி 14-ல் டென்மார்க் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார்.
இதன் பிறகு சில தினங்களுக்கு முன்பும் ஓடும் காரில் டெல்லியை சேர்ந்த மணமான 28 வயது பெண் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இதனால், கேஜ்ரிவாலின் அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், டெல்லியின் தலைமை செயலாளர் தலைமைல் 'மகளிர் பாதுகாப்புப் படை' எனும் பெயரில் ஒரு குழு அமைக்க கெஜ்ரிவாலின் அமைச்சரவை ஒப்புதல் செவ்வாய்க்கிழமை அளித்துள்ளது.
இந்தக் குழுவின் பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் ஈடுபட இருப்பதாக கேஜ்ரிவால் தெரிவித்தார்.
இந்தக் குழு, பாலியல் குற்றம் புரிபவர்களை மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு சிறைக்கு அனுப்பும் வகையில் செயல்படும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.