

எகிப்தில் கொலை வழக்கில் சிக்கிய இந்திய பெண்ணுக்கு ஆந்திராவில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.வி பல்லி பகுதியைச் சேர்ந்தவர் நாகமுனியம்மா என்கிற நாகமணி (45). இவர் 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றுவதற்காக துபாய்க்கு சென்றார். பின்னர் அங்கிருந்து எகிப்து சென்று பணியாற்றினார்.
இந்நிலையில், எகிப்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் நாகமணி தான் குற்றவாளி என தெரியவந்தது. இதையடுத்து எகிப்து நீதிமன்றம் நாகமணிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. எகிப்து சட்டப்படி குற்றவாளிகள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களது சொந்த நாட்டிலேயே தண்டனை அனு பவிக்க முடியும். எனவே ஆந்திரா வில் உள்ள சிறையில் தண்டனை அனுபவிக்க அனுமதிக்கும்படி நாகமணி எகிப்து நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதற்கு அனுமதி வழங்கியதை அடுத்து நாகமணி அண்மையில் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுக் கடப்பாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 2025-ம் ஆண்டில் நாகமணி சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.