இரோம் ஷர்மிளாவிற்கு ஆம் ஆத்மி அழைப்பு: முதல் அமைச்சராக முன்னிறுத்துவதாக வாக்குறுதி

இரோம் ஷர்மிளாவிற்கு ஆம் ஆத்மி அழைப்பு: முதல் அமைச்சராக முன்னிறுத்துவதாக வாக்குறுதி
Updated on
1 min read

ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரப் போராளியான இரோம் ஷர்மிளாவை தம் கட்சியில் சேருமாறு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இவரை மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.

மணிப்பூரில் ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தவர் இரோம் ஷர்மிளா. இவர் அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டியிட வேண்டி கடந்த 9 ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது, தாம் சுயேச்சையாக போட்டியிட்டு மணிப்பூரின் முதல்வராக விரும்புவதாகவும் அறிவித்தார்.

இதை அடுத்து அவரை தம் பக்கம் இழுக்க பல்வேறு அரசியல் கட்சிகள் முயற்சி செய்கின்றனர். இவர்களில், முதல் கட்சியாக பிஹார் முதல் அமைச்சரான நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் வெளிப்படையாக அழைப்பு வெளியிட்டது. தற்போது இரண்டாவது கட்சியாக ஆம் ஆத்மி கட்சி நேற்று ஷர்மிளாவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளது. இக்கட்சியின் மணிப்பூர் மாநில அமைப்பாளாரான சவுடம் மணிஹார் தலைமையில் மூவர் குழு ஷர்மிளாவை அரைமணி நேரம் சந்தித்து பேசியுள்ளனர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘டெல்லி முதல் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ர்வால் கையெழுத்திட்ட அழைப்புக் கடிதம் ஷர்மிளாவிடம் ஒப்படைக்கபட்டது. டெல்லியின் சில முக்கிய தலைவர்களிடம்

போன் மூலமாகவும் பேச வைக்கப்பட்டது. எங்கள் கட்சியின் கொள்கைகளும், செயல்பாடுகளும் ஷர்மிளாவை மிகவும் ஈர்த்துள்ளன. எனினும், அவர் தான் சுயேச்சையாக போட்டியிடும் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. ஆம் ஆத்மி கட்சி குறித்த சந்தேகங்களை எந்நேரமும் தீர்த்துக் கொள்ள வேண்டி முக்கிய தலைவர்களின் மொபைல் எண்கள் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அவர் ஆம் ஆத்மி கட்சியில் கண்டிப்பாக சேருவார் என்ற நம்பிக்கை உள்ளது.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை இம்பால் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடப்பட்ட பின் மணிப்பூர் மருத்துவமனையிலேயே ஷர்மிளா தங்கியுள்ளார். இவருக்கு தங்கும் இடம் அளிக்க, மணிப்பூர் பகுதியின் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் அவருக்கு மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுவதால், அதன்பிறகு தனது தங்கும் இடம் குறித்து ஷர்மிளா முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in