

டெல்லியில் உள்ள பகுஜன் சமாஜ் எம்.பி. தனஞ்செய் சிங் வீட்டில் பணிப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக எம்.பி.யும், அவரது மனைவி ஜாகீரதி சிங்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டனர்.
தெற்கு டெல்லியில் உள்ள எம்.பி.யின் வீட்டில் பணிப்பெண் ராக்கி (35) கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்துள்ளார். திங்கள்கிழமை இரவு அவர் உயிரிழந்து விட்டதாக போலீஸாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்.பி. வீட்டில் பணியாற்றும் மற்றொரு ஊழியர் ராம்பால் (17) போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஜாகீரதி சிங் இரும்பு கம்பியால் அடித்ததில் ராக்கி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீஸார் செய்தியாளர்களிடம் பேசியபோது, பணிப் பெண்ணின் கை, கால், மார்பில் காயங்கள் உள்ளன. எனினும் பிரேத பரிசோதனைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தனஞ்செய் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியது: நானும் எனது மனைவியும் விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். இருவரும் தனித்தனி வீடுகளில் வசிக்கிறோம். திங்கள்கிழமை இரவு ஜாகீரதி என்னிடம் செல்போனில் பேசினார். 3 நாள்களுக்கு முன்பு பணிப்பெண் கீழே விழுந்து பலத்த காயமடைந்ததாகவும், தற்போது உயிரிழந்துவிட்டதாகவும் கூறினார். நான் நேரில் வந்து பார்த்த பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தேன் என்றார்.
தனஞ்செய் சிங்கின் முதல் மனைவி 2007-ல் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து பல் மருத்துவரான ஜாகீரதியை அவர் 2-வதாக திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 7 மாதங்களாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜாகீரதி சிங்கை முதலில் கைது செய்த போலீஸார், பின்னர் தனஞ்செய் சிங் எம்.பி.யையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.