

சிறுநீரகக் கோளாறு மற்றும் மூச்சு திணறல் காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சரும், கன்னட முன்னணி நடிகருமான அம்பரீஷை (62) அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு சென்றனர்.
அம்பரீஷின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியதாலே அவர் சிங்கப்பூர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சரும், கன்னட முண்ணனி நடிகருமான அம்பரீஷ் கடந்த 21-ம் தேதி இரவு மூச்சுத் திணறல்,சிறுநீரகக் கோளாறு காரணமாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அம்பரீஷ் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் மருத்துவமனையின் முன்பாகவும் கர்நாடகம் முழுவதும் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வாரமாக விக்ரம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சதீஷ் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர்.இருப்பினும் அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. அம்பரீஷ்க்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு 'விக்ரம்' மருத்துவமனையில் இருந்து 10 மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் அம்பரீஷ் உயர் சிகிச்சைக்காக விமானம் மூலமாக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடன் அவரது மனைவி சுமலதா, மகன் அபிஷேக் மற்றும் உறவினர்கள் சிலர் சென்றனர்.
சிங்கப்பூர் சென்ற அம்பரீஷ் உடனடியாக அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் இதே மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் அறிவுரை
அம்பரீஷ் திடீரென சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக, அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.
அம்பரீஷின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு ரகசியமாக பெங்களூர் வந்து அம்பரீஷை சந்தித்தார். அப்போது அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அம்பரீஷின் மனைவி சுமலதாவிற்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதன்படி தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அம்பரீஷ் சிகிச்சைப் பெற்றால் விரைவில் குணமடைவார் என கூறியதாக தெரிகிறது.