

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை தேர்தல் நேரத்தில் செயல்படுத்தப்பட முடியும் என்ற போது, எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு மட்டும் ஏன் சாத்தியமில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயரும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக டெல்லி முன்னாள் முதல் அமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் யூடியூபில் பதிவு செய்துள்ள வீடியோவில், "கடந்த ஜூன் மாதம் 27- ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவிற்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்பத்ற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அதாவது, ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் ஒழுங்குமுறை அமல்ப்படுத்தப்பட்டது. எனினும் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை தேர்தல் நேரத்தில் செயல்படுத்தப்பட முடியும் என்றபோது, எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு மட்டும் ஏன் சாத்தியமில்லை?. எரிவாயு விலை உயர்வை அரசியல் காரணங்களுக்காக பயன்ப்படுத்துவது வருந்தத்தக்கது” என்று ரிலையன்ஸ் நிறுவனம் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் பெயரை குறிப்பிடாமல், "ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசின் எரிவாயு விலை உயர்வு தொடர்பான பரிசீலினைக்கு தடை செய்ய கோரியுள்ளது. அந்த கட்சிக்கு ஆதாரம் அளிக்க முடியாத தவறான தகவல்களை பரப்பி பிறரை வசைபாடி வந்த ஒரு வரலாறு உண்டு. எனவே அந்த கட்சியின் புகார் ஆய்வு செய்யப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.