

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணய்ய குமாரின் ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கான அவசியம், சூழல் என்ன என்று டெல்லி போலீஸாரிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கண்ணய்ய குமாருக்கு எதிரான தேச விரோத வழக்கு விசாரணையில் நீதிபதி பி.எஸ்.தேஜி இதுகுறித்த விசாரணையின் போது டெல்லி போலீஸ் தரப்பு அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷைலேந்திர பாபுவிடம் கேள்வி எழுப்பியபோது, “உங்கள் விசாரணை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கண்ணய்ய குமாரின் ஜாமீனை ரத்து செய்வதற்கான காரண காரியம் என்ன, அவசியம் என்ன? விசாரணைக்கு அவர் இடையூறு செய்யவில்லை எனும்போது ஏன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த ஷைலேந்திர பாபு, “நாங்கள் ஜாமீன் ரத்து கோரவில்லை. வேறு சிலர்தான் 6 மாத ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு செய்திருந்தனர்” என்றார். அதாவது ஜாமீனில் வெளிவந்து அவர் உரையாற்றிய போது பேசியது தேச விரோதக் கருத்துகள் கொண்டது, மேலும் அவர் ஜாமீன் நிபந்தனையை மீறியுள்ளார் என்று அந்த மனுவில் சில தனியார்கள் குறிப்பிட்டிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதற்கு நீதிபதி, இந்த மனுக்கள் மீது போலீஸ் தரப்பு தங்கள் பதில்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லையே என்று கேட்டனர், அதற்கு நிலவர அறிக்கை மூலமாக பதில் அளித்துள்ளனர் என்றார் அரசு வழக்கறிஞர். அதற்கு நீதிபதி, “எனக்கு பதில்தான் தேவை, நிலவர அறிக்கை அல்ல. கடந்த முறையே தெளிவாகக் குறிப்பிட்டோம் பதில்தான் தேவை, நிலவர அறிக்கை தேவையில்லை என்று.
இதனால் போலீஸ் பதில் சமர்ப்பித்தவுடன் வழக்கை விசாரிக்கிறோம் என்று நீதிபதி கூறியதையடுத்து, மனுதாரர்களில் ஒருவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆர்.பி.லுத்ரா, “6 மாதகால ஜாமீன் முடிந்த பிறகு இந்த மனு மீதான விசாரணையினால் என்ன பயன்? ஜாமீனை ரத்து செய்யவே இந்த மனு” என்றார்.
இதற்கு நீதிபதி, “கோர்ட் எப்படி நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை” என்று கடுமையாக கூறி விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.