

மத்தியப் பிரதேச மாநிலம் மான்ட்சர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் பலியானார். கோயிலுக்குச் சென்ற விவசாயியை போலீஸார் சுற்றி வளைத்து தாக்கியதாலேயே அவர் இறந்தார் எனக் கூறி கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
மால்வா பிராந்தியத்தில் இதுவரை விவசாயிகள் - போலீஸ் மோதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மான்ட்சர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞான்ஷ்யாம் தக்கத் (26) என்ற விவசாயி சிகிச்சை பலனின்றி காயமானார்.
இது குறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தூர் மருத்துவமனை வட்டாரம், "26 வயது இளைஞர் ஒருவரை சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரிந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்தன" என்றார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டுவந்த கிராமவாசிகள் வீட்டிலிருந்து கோயிலுக்குச் சென்ற தக்கத்தை இடைமறித்த போலீஸார் சிலர் அவரை சரமாரியாக தாக்கினர் எனக் கூறினர்.
இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே, மான்ட்சர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங், ஆட்சியர் ஓ.பி.ஸ்ரீவஸ்தவ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராமவாசிகளுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.
இளைஞர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்ற காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., சஜ்ஜான் சிங், இளைஞர் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
மான்ட்சர் மாவட்ட கலவரம் தற்போது போபாலுக்கும் பரவியுள்ளதாக மேலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.