Published : 17 Dec 2015 12:18 PM
Last Updated : 17 Dec 2015 12:18 PM

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரம்: அருண் ஜேட்லியின் பதவி நீக்கம் கோரும் காங்கிரஸ்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தை தற்போது காங்கிரஸ் தன் கையில் எடுத்துள்ளது. அருண் ஜேட்லி தலைமைப் பொறுப்பில் இருந்த காலக்கட்டத்தில்தான் இந்த ஊழல்கள் நடைபெற்றுள்ளது என்று சாடிய காங்கிரஸ் அவரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளது.

மேலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை ஒன்றும் இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அதில் அருண் ஜேட்லிக்கு தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமாரின் அலுவலகம் சிபிஐ சோதனைக்குட்பட்டதையடுத்து, முதல்வர் கேஜ்ரிவால் கூறும்போது இந்த சோதனை உண்மையில் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான கோப்புகளை கொண்டு செல்லவே என்றும் அருண் ஜேட்லியை காக்கவே இந்த ரெய்டு என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுப்பதில் கேஜ்ரிவாலுக்கு சாதகம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் இதனை அடக்கி வாசித்து, பாஜக-வின் பழிவாங்கும் அரசியல், அருணாச்சல் ஆளுநர் விவகாரம் என்று சற்றே திசைதிருப்பியது.

குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மாக்கன் பிற்பாடு டெல்லி அரசின் விசாரணை ஆவணங்களை ஊடக நிருபர்களிடம் காண்பித்து, பல்வேறு டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகளை சுட்டிக்காட்டினர்.

டெல்லி ஸ்டேடியம் புனரமைப்புத் தொகையை ரூ.24 கோடியிலிருந்து ரூ.114 கோடிக்கு அதிகரித்தது, டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு தொடர்புடையவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியது, தனியார் நிறுவனங்களுக்கு தவறான முறையில் பணம் அளித்தது இவையனைத்தும் அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்க சேர்மனாக இருந்த போது நடந்துள்ளது என்று அவர்கள் கூறினர்.

குலாம் நபி ஆசாத் கூறும்போது, இந்த விசாரணை அறிக்கை அவர் கைக்கு வந்தபிறகும் கூட கேஜ்ரிவால் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அனைத்து முதன்மை விசாரணைக் கழகங்களும், அதாவது அமலாக்க இயக்குனரகம், வருவாய் உளவுப்பிரிவு, மோசடி விசாரணை அலுவலகம் என்று அனைத்தும் ஜேட்லியிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் விசாரணை கழகங்களாகும். எனவே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையே இதில் பாரபட்சமில்லாமல் நடைபெறும் என்று அதற்காக வலியுறுத்தினார் குலாம் நபி ஆசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x