

லோக்பால் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம், தேவைப்பட்டால் இதற்காக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நீட்டிக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற சமாஜ்வாதி கட்சியினர் ஆதரவளிக்க வேண்டும் என்றார். மேலும், மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என தான் முழுமையாக நம்புவதாகவும் கூறினார்.
சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்தை அடுத்து, கடந்த 2011-ஆம் ஆண்டு லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், லோக்பால் மசோதாவை நடப்பு குளிர் கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றக் கோரி அண்ணா ஹசரே கடந்த 10-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
டிசம்பர் 20-ஆம் தேதியுடன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.