

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை எடுக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) பரிந்துரைத்துள்ளது.
கல்மாடி மீதான புகார்களின் பேரில் சிவிசி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு. சிவிசி அளித்துள்ள பதிலில், தில்லியில் 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் பல்வேறு நிதி முறைகேடுகளும், ஊழலும் நடைபெற்றதாகவும், ஒப்பந்தப் பணி ஒதுக்கப்படுவதில் கல்மாடிக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு ஏற்ப பாரபட்சம் நிலவியதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனிப்பட்ட முறையில் நேரடியாக விசாரணை நடத்தி கல்மாடி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. கல்மாடி மீதான முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ-க்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிபிஐ விசாரித்து அளித்த அறிக்கைக்குப் பின் அந்த விவகாரத்தை கைவிட சிவிசி முடிவு செய்தது.
எனினும், நிதிமுறைகேட்டில் பல்வேறு உண்மைகளை மறைக்க கல்மாடி முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவரது அறிக்கைக்காக சிவிசி காத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்மாடி மீதும், காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணை இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.கே.சச்சேட்டி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யவும் பரிந்துரைத்துள்ளோம் என்று சிவிசி கூறியுள்ளது.
சச்சேட்டி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக இப்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.